நட்சத்திர விடுதிகளைத் தனிமைப்படுத்தல் நிலையங்கள் ஆக்கலாம்- சிவமோகன் ஆலோசனை

நாட்டில் அமைந்துள்ள நட்சத்திர விடுதிகளின் அறைகளே தனிமைப்படுத்தும் செயற்பாட்டிற்கான உரிய இடங்கள் என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுகுறித்த அவர் கூறுகையில், “மாவட்டம் தோறும் கொரோனோ வைத்தியசாலை ஒன்றை அமைக்குமாறு அரசாங்கம் அவசரமாக அறிவித்துள்ளது. அந்த அறிவித்தல்கள் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று அந்தப் பணிமனைகள் என்ன செய்வது, எப்படிச் செய்வது என்று எண்ணும் நிலை ஏற்றபட்டுள்ளதுடன், அனைத்து மாவட்டங்களும் அதனை செயற்படுத்தக்கூடிய நிலையில் இருக்கிறதா என்பதும் கேள்விக்குறியே. அதனை செயற்படுத்தினால் நல்லது.

அந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதற்குக் கூட தற்போது இடமில்லை. உயிர் போய்கொண்டிருக்கும் நேரத்தில் அரசாங்கமானது வெறுமனே பந்துகளை மாத்திரம் எறிந்துகொண்டிருக்கின்றது.

அத்துடன் சுகாதாரத் துறையினருக்கான பாதுகாப்பு உபகரணங்கள் இங்கு உள்ளதா? பாதுகாப்பு கவசங்கள், உடைகள், முகக் கவசங்கள் உள்ளதா என்பது தொடர்பாக அவதானிக்க வேண்டும்.

இராணுவத்தினருக்கு வந்ததுபோல சுகாதாரத் துறையினருக்கும் வைரஸ் தொற்று இனங்காணப்பட்டால் பொதுமக்களை யார் பாதுகாக்கப் போகின்றார்கள்.

தற்போது, பாடசாலைகளை இராணுவத்தின் தனிமைப்படுத்தும் நிலையங்களாக அமைப்பதற்காக வேண்டுகோள் விடப்படுகின்றது. பாடசாலைகளில் குறுக்கு தொற்று ஏற்படுவதற்கான ஒரு நிலை இருக்கின்றது. பாடசாலைகளில் பொதுமலசலக் கூடங்களே காணப்படுகின்றன. தனிமைப்படுத்துவதற்கான வசதிகள் அங்கு மிகவும் குறைவு. இதனால் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.

இதனாலேயே பாடசாலைகளை தனிமைபடுத்தல் நிலையங்களங்காக பயன்படுத்துவதற்கு மக்கள் பயப்படுகின்றார்கள். எனவே வடக்கு மக்களின் பயத்தைப் போக்கவேண்டியது சுகாதாரத்துறையின் கடமை.

அத்துடன் மாவட்டத்திற்கு மாவட்டம் தற்போது தனிமைப்படுத்தல் நடவடிக்கை உள்ளதாகத் தெரிவிக்கும் நிலையில் இன்னுமொரு மாவட்டத்தில் சந்தேகத்திற்கிடமானவர்களை எமது மாவட்டங்களுக்குக் கொண்டுவருவது எந்தகொள்கை அடிப்படையில் எடுக்கபட்பட்ட முடிவு?

அதுதவறான முடிவாகவே இருக்கிறது. எனவே குறுக்குத்தொற்று ஏற்படாமல் தனிமைப்படுத்துவதற்கான மாற்று நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கான ஒரே தெரிவாக நட்சத்திர விடுதிகளைப் பார்க்கமுடியும்.

அங்கு அறைக்கு அறை தனியான குளியலறைகள் உண்டு. ஏனைய வசதிகளும் இருக்கின்றன. தற்போது நட்சத்திர விடுதிகள் அனைத்தும் பாவனையற்றே இருக்கிறன. எனவே குறித்த நிறுவனங்களுக்கு அரசாங்கம் கொடுப்பனவுகளை வழங்கி அந்தச்செயற்பாட்டை முன்னெடுக்கமுடியும்” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.