கால்பந்து போட்டிகளை நடத்தாமல் தவிர்ப்பதே சிறந்தது: சர்வதேச கால்பந்து சம்மேளன மருத்துவ குழு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்துவருவதால், கால்பந்து போட்டிகளை நடத்தாமல் தவிர்ப்பதே சிறந்தது என சர்வதேச கால்பந்து சம்மேளன மருத்துவ குழு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று முடக்கத்தால், பெரும்பாலான கால்பந்து சங்கங்கள் கால்பந்து போட்டிகளை நடத்துவதில் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது.
அத்துடன், வருவாய் இல்லாமல் நிதி பற்றாக்குறையை சந்தித்துள்ள கால்பந்து சங்கங்கள், வீரர்களுக்கு ஊதியம் கொடுக்க திணறிவருகின்றது.
இந்தநிலையில், சாத்தியம் இருந்தால் எதிர்வரும் நாட்களில் கால்பந்து போட்டிகளை நடத்தாமல் தவிர்க்க வேண்டும் என்பதே தனது பரிந்துரை என சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) மருத்துவ குழுவின் தலைவர் மைக்கேல் டி ஹூகே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ இப்போது கால்பந்து போட்டிகளை தொடங்கினால் அது மிகப்பெரிய அபாயமாகிவிடும். இந்த சீசனில் மீதமுள்ள போட்டிகளை இத்துடன் தவிர்த்து விட்டு, புதிய சீசனுக்கான போட்டிகளை சிறந்த முறையில் தொடங்க தயார்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
மீண்டும் விளையாட முடிவு எடுக்கும் முன்பு ஒவ்வொருவரும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என கூறினார்.
எனினும், ஐரோப்பியாவில் கால்பந்து லீக் தொடர்களை நடத்தும் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகள் தடைர்பட்டுள்ள எஞ்சிய போட்டிகளை நடத்தி முடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
கருத்துக்களேதுமில்லை