மே 01 – சர்வதேச தொழிலாளர் தினம் இன்று

உலக தொழிலாளர்களை கெளரவிக்கும் முகமாக இன்று உலகளாவிய ரீதியில் தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

“பாடுபட்டு உழைப்போர்க்கே இப்பார் உலகம் சொந்தம்” என்பது மூத்தோர் வாக்கு.

உலகத்தின் இயக்கத்தின் அத்தனை அங்கங்களிலும் ஒரு தொழிலாளியின் முயற்சியும், அந்த முயற்சியின் வெளிப்பாடான வியர்வைத்துளிகளும் அங்கம் வகிக்கின்றன.

இவ்வாறு பார் சிறக்கப் பாடுபடும் தொழிலாளர்களுக்கான உரிய அங்கீகாரம் கிடைக்கப்பெறுகின்றனவா என்பது ஆண்டாண்டு காலமாக முன்வைக்கப்பட்டு வரும் கேள்வி என்றாலும் இன்று வரை அதற்க்கான பதில் கிடைத்ததை இல்லை.

இந்நிலையில் தொழிலாளர்களின் பங்கினை நினைவுகூரும் விதமாகவும் ஆண்டில் ஒரு நாளேனும் தொழிலார்களை கெளரவப்படுத்தும் விதமாகவும் வருடத்தின் மே மாதம் முதலாம் திகதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகின்றது.

1886 ஆம் ஆண்டு மே மாதம் நான்காம் திகதி அமேரிக்காவின் சிக்காகோவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பல் தேசிய பொதுவுடைமைவாதிகளால் குறித்த உழைப்பாளர் தினமானது ஒவ்வொரு வருடமும் மே 1ம் திகதி கொண்டாடப்படும் என பரிந்துரைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, 1904ம் ஆண்டு சர்வதேச சோஷலிச காங்கிரஸினால் நடத்தப்பட்ட இரண்டாம் சர்வதேச மாநாட்டில், உலகெங்கும் உள்ள சோஷலிச அமைப்பாளர்கள் மற்றும் வர்த்தக அமைப்புகளால் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் உலக சமாதானம் ஆகியவற்றை வலியுறுத்தி மே மாதம் முதலாம் திகதி இத்தினம் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என அறிவித்தல் விடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் குறித்த உழைப்பாளர் தினம் உலகத்தின் அனைத்து நாடுகளாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் இத்தினமானது சர்வதேச ரீதியில் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை உலகின் பல நாடுகளாலும் தத்தமது கலாசார முறைமைக்கு ஏற்ப இத்தினத்தை சிறப்பித்து வருகின்றனர்.

அதனடிப்படையில் இந்நாளில், உலகெங்கும் பரந்து வாழும் தொழிலாளர்களுக்கு மறுக்கப்படும் அடிப்படை உரிமைகள் இந்நாளில் வலியுறுத்தப்படும் அதேவேளை ஓர் தேசத்தின் நலனுக்காக தமது முழு உழைப்பையும் வழங்கும் தொழிலாளர்களின் சிறப்புகள் இந்நாளில் பறைசாற்றப்படுகின்றன.

இதேவேளை சர்வதேச ரீதியான உத்தியோக பூர்வ தினமாக மே மாதம் 1ம் திகதி காணப்படுகிற நிலையில், சில நாடுகளில் தேசிய ரீதியாக குறித்த தொழிலார் தினம் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது.

அதனடிப்படையில், கனடாவில் இத்தினமானது 1880ம் ஆண்டில் இருந்து செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது.

அதே போன்று நியூசிலாந்தில் ஒக்டோபர் மாதத்தின் நான்காவது திங்கட்கிழமை குறித்த தினம் கொண்டாடப்படுவதுடன், அமெரிக்காவிலும் செப்டெம்பர் மாதத்தின் முதல் திங்கள் அன்று தேசிய விடுமுறை அளிக்கப்பட்டு குறித்த தினம் கொண்டாடப்படுகின்றது.

இலங்கையினை பொறுத்தவரை தொழிலாளர் தினமானது வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்படாத வகையில், மே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படும் அதேவேளை, இந்நாளில் தேசிய விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.

மேலும் இந்நாளில் தொழிலார்களது உரிமைகளை வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகளால் பேரணிகள் நடத்தப்படும் அதேவேளை இலங்கையில் தொழிலாளர் தினமானது மத ரீதியாகவும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், கோவில்கள் மற்றும் ஆலயங்கள் உள்ளிட்ட இலங்கையின் மத தலங்களில் இந்நாளில் விசேட வழிபாடுகள் நடத்தப்படும் அதேவேளை தொழிலாளர் நலன்களுக்காக அனைத்து மதம் சார்ந்தவர்களும் பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது,

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.