கெய்லின் குற்றச்சாட்டுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளேன்: சர்வான் விளக்கம்
ஜமைக்கா தலாவாஸ் அணியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, கிறிஸ் கெய்ல் தன்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளதாக அணியின் உதவி பயிற்சியாளரும் முன்னாள் வீரருமான ராம்நரேஷ் சர்வான் தெரிவித்துள்ளார்.
கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் நடப்பு சீசனில் ஜமைக்கா தலாவாஸ் அணியிலிருந்துஇ மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல், நீக்கப்பட்டார்.
இதற்கு ராம்நரேஷ் சர்வான் தான் காரணம் என கிறிஸ் கெய்ல் கடுமையாக சாடினார். இந்தநிலையில் கெய்லின் குற்றச்சாட்டுகளை சர்வான் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
‘2020ஆம் ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடருக்காக, கிறிஸ் கெயிலை ஜமைக்கா அணி நீக்கியதில் என் பங்கு எதுவுமில்லை. அந்த காணொளியில் தவறான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி பலருடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியுள்ளார்.
என்னைத்தான் அதிகம் குறி வைத்துள்ளார். கெய்லின் குற்றச்சாட்டுகளுக்கு மதிப்பளித்து நான் பதில் அளிப்பதாக எண்ண வேண்டாம். ஆனால் அவர் களங்கம் ஏற்படுத்தியுள்ள பலருடைய வாழ்க்கை மற்றும் குணாதிசயங்களைக் காப்பாற்றவே இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.
என் கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கம் முதல், கெய்லுடன் விளையாடி வருகிறேன். அபரிதமான திறமை கொண்டவராக அவரை மதிக்கிறேன். முக்கியமாக என் நண்பரும் கூட. எனவே அவருடைய குற்றச்சாட்டுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளேன்’ என கூறினார்.
கெய்லின் குற்றச்சாட்டுகளை ஜமைக்கா அணியும் மறுத்துள்ளது. அணி உரிமையாளர்களும் நிர்வாகமும் எடுத்த முடிவின் படி கெய்ல் நீக்கப்பட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை