பிறந்த குழந்தைக்கு சோப்பு பயன்படுத்தலாமா?
குழந்தை பிறந்தது முதல் ஒரு வயது வரை ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து கவனிக்க வேண்டும். செய்ய வேண்டும். அழகாய் சிரித்துகொண்டிருக்கும் குழந்தை வீறிட்டு அழுதாலும் காரணத்தை புரிந்து கொள்வது அம்மாக்களுக்கு சவாலானதுதான்.
குழந்தையின் மென்மையான மிருதுவான சருமத்தை பராமரிக்க தவறும் போது ரேஷஷ், தடிப்பு, தோல் உரிவு பிரச்சனை உண்டாகக்கூடும். இந்நிலையில் தினமும் குழந்தையை குளிப்பாட்ட சோப்பு உபயோகிப்பது எந்தளவுக்கு பாதுகாப்பானது என்பதை அம்மாக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
குறிப்பாக கோடைக்காலங்களில் அதிக உடல்வெப்பநிலையில் வியர்க்குரு பிரச்சனை குழந்தைகளுக்கும் உண்டாகக்கூடும். இந்நிலையில் குழந்தைகளுக்கான பேபி சோப்பை தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதில் அதிகம் கெமிக்கல் இல்லை என்பதும் உண்மையே. ஆனால் எவ்வளவு முறை பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். அதற்கு முன்பு முன்னோர்கள் காலத்தில் குழந்தைகளை எப்படி எதை கொண்டு குளிக்கவைத்தார்கள் என்பதையும் சுருக்கமாக தெரிந்துகொள்வோம். தற்போது மருத்துவர்கள் குழந்தையின் தொப்புள் கொடி விழும் வரை குளிக்க வைக்கவேண்டாம் என்கிறார்கள்.
ஆனால் பிறந்த குழந்தையை உடனடியாக குளிப்பாட்டி விட்டார்கள் நம் முன்னோர்கள். மேலும் குழந்தைக்கு பாசிப்பருப்புடன் வெந்தயம், கடலைப்பருப்பு, பூலாங்கிழங்கு, ஆவாரம்பூ, ரோஜா, செம்பருத்தி பூ, வேப்பிலை, துளசி, வெட்டிவேர், கைப்பிடி அரிசி அனைத்தையும் சேர்த்து அரைத்த குளியல் பொடிகளை தான் குழந்தைகளுக்கு பயன்படுத்திவந்தார்கள். மேலும் சில மூலிகை பொருள்களையும் சேர்த்து வந்தார்கள் (இது குறித்து தனியாக பார்க்கலாம்) ஆண் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் போது மட்டும் மஞ்சள்(மஞ்சள் முடியின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் என்பதால்) நீக்கிவிடுவார்கள்.
இதனால் குழந்தைகளின் சரும மென்மை பாதுகாக்கப்பட்டது. சருமத்துக்கு வேண்டிய ஊட்டச்சத்துகள் இதில் இருந்தது. குழந்தைகள் ரோஜாப்பூ போன்ற மென்மையான சருமத்தை தக்கவைத்து கொள்ள இவை உதவியது. இதோடு இவை நோய்த்தொற்றையும் உருவாக்காது. இதில் வேப்பிலையும் துளசியும் இருப்பதால் குழந்தைகளுக்கு சரும பிரச்சனைகள், சொரி, சிரங்கு எதுவும் தாக்காமல் இருந்தது.
கால மாற்றத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பேபி சோப்பும், பேபி ஷாம்பும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. தற்போது பெரும்பாலான அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு 3 வயது வரை இந்த சோப்புகளை தான் பயன்படுத்திவருகிறார்கள் தற்போது குழந்தைக்கு ஆயில் மசாஜ் கூட இயற்கை எண்ணெயை பயன்படுத்தாமல் மார்க்கெட்டில் கிடைக்கும் பொருள்களையே பயன்படுத்துகிறார்கள். அவசர உலகில் இதை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்ல முடியாது. ஆனால் அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்பதை மனதில் வையுங்கள்.
தற்போது குழந்தைகளுக்கு பேபி சோப்புகளை போன்று குளியலுக்கான லோஷன்கள் கிடைக்கிறது. இதை அப்படியே கைகளில் ஊற்றி தேய்க்காமல் சம அளவு தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம். சோப்புகள் குழந்தையின் பட்டான சருமத்தில் இருக்கும் எண்ணெய்தன்மையை வெளியேற்றி சருமத்தை வறட்சியடையச்செய்ய வைக்கும்.
மேலும் சோப்புகள் நுரை வந்தால் தான் அவை சருமத்தின் நிறத்தை மாற்றும் என்றோ சருமத்தின் கலரை அதிகரிக்கும் என்பதோ தவறான கருத்து. சொல்லபோனால் அதிக நுரையில்லாத கெமிக்கல் கலக்காத க்ரீம் போன்ற சோப்புகள் குழந்தையின் சருமத்துக்கு ஏற்றவை.
வெயில் காலத்தில் குழந்தைக்கு உடல் வெப்பம், வியர்வை பிரச்சனை வராமல் இருக்க இரண்டு வேளை குளிப்பாட்டுவது நல்லது. ஆனால் இரண்டு வேளையும் சோப்பு போட்டு குளிக்க வைக்க கூடாது. மேலும் குழந்தையின் உடலை ஒரு முறை சோப்பு அல்லது சோப்புக்கு மாற்றான லோஷன் கொண்டு தேய்த்து குளிக்க வைத்தால் போதும்.
குழந்தையின் கழுத்து, கை மடிப்பு, அக்குள், தொடை இடுக்கு பகுதியில் தேய்த்து சுத்தம் செய்தால் போதும். பெண் குழந்தைகளின் உறுப்பலும், ஆசன வாய் பகுதியில் சோப்பு பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குழந்தையின் சருமம் மென்மையானது அதைவிட இந்த உறுப்பு மேலும் மென்மையாக இருக்கும். அதே போன்று குழந்தையின் உடலுக்கு பயன்படுத்தும் சோப்பு அல்லது லோஷனை தலைக்கு தேய்த்தும் குளிப்பாட்டகூடாது. இவை குழந்தைகளின் தலைமுடியை பாதிக்க செய்யும். மென்மையான முடியை கடினமாக மாற்றிவிடும்.
குழந்தையின் தலையை சுத்தமான தேங்காயெண்ணையால் மசாஜ் செய்ய வேண்டும். குழந்தை மருத்துவ நிபுணரின் ஆலோசனையோடு கெமிக்கல் அதிகம் இல்லாத ஷாம்புக்களை பயன்படுத்த வேண்டும். வாரம் இருமுறை குழந்தையின் தலையை சுத்தப்படுத்துவதை மறக்க வேண்டாம். இல்லையெனில் பொடுகு வரவும் வாய்ப்புண்டு.
எவ்வளவு நாட்கள் என்கிறீர்களா? குழந்தை பிறந்தது முதல் குறைந்தது 1 வயதாகும் வரை இதை பின்பற்ற வேண்டும். சோப்பும் லோஷனும் வேண்டாம். பாரம்பரிய முறைப்படி குளியல் பொடி பயன்படுத்தலாமா என்றால் தாராளமாக பயன்படுத்தலாம். குழந்தை பிறந்தது முதல் ஆயுள் முழுமைக்கும். ஏனெனில் பக்கவிளைவில்லாத முன்னோர்களின் வைத்தியம் இது. அழகும் ஆரோக்கியமும் ஆயுள் வரை இருக்கும்.
கருத்துக்களேதுமில்லை