சிறந்த வீரராக உருவெடுப்பதற்கு இந்த தருணம் நல்லதொரு வாய்ப்பாகும்: மார்னஸ் லபுஸ்சேன்

துடுப்பாட்டம் குறித்து மறுஆய்வு செய்வதற்கும், சிறந்த வீரராக உருவெடுக்க நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டியது என்ன என்பதை புரிந்து கொள்வதற்கும் இந்த தருணம் நல்லதொரு வாய்ப்பாகும் என அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட சகலதுறை வீரரான மார்னஸ் லபுஸ்சேன் தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் வீரர்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகின்றனர்.

இதுபோன்றதொரு உலகளவிலான முடக்கம் பதிவான வரலாறு இல்லை என்பதால், இந்த காலகட்டத்தில் தங்களின் நிலையை மதிப்பீட்டு கொள்ள முடியும் என மார்னஸ் லபுஸ்சேன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கடந்த ஆண்டு எதிர்பாராத வகையில் சிறப்பாக அமைந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரத்தில் எனது துடுப்பாட்டத்தில் மேலும் முன்னேற்றம் காண்பது குறித்து கவனம் செலுத்தி வருகிறேன். கொரோனா பிரச்சினை முடிந்து களம் திரும்புகையில் அடுத்த நிலைக்கு முன்னேறுவதற்கு முயற்சி செய்ய தயாராக இருக்கிறேன். ஒருநாள் போட்டியை பொறுத்தமட்டில் கடைசி கட்டத்தில் அடித்து விளையாடும் விடயத்தில் முன்னேற்றம் காண வேண்டும் என்று விரும்புகிறேன். குறுகிய வடிவிலான போட்டியில் மேலும் அதிக ஓவர்கள் பந்து வீசும் அளவுக்கு ஏற்றம் அடைய நினைக்கிறேன்.

துடுப்பாட்டத்தில் எந்தவொரு நிலைக்கு உயர்ந்தாலும் அதில் திருப்தி அடையாமல் மேலும் ஏற்றம் காண வேண்டும் என்ற நோக்கில் செயற்பட வேண்டியது அவசியமானதாகும். தற்போதைய நேரம் மிகவும் முக்கியமானது. இதற்கு முன்பு இதுமாதிரி ஒருபோதும் நடந்ததில்லை. உங்கள் துடுப்பாட்டம் குறித்து மறுஆய்வு செய்வதற்கும், சிறந்த வீரராக உருவெடுக்க நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டியது என்ன? என்பதை புரிந்து கொள்வதற்கும் இந்த தருணம் நல்லதொரு வாய்ப்பாகும்.

இந்தியாவுக்கு எதிரான போட்டி தொடர் நடைபெற முடியாமல் போனால் அது எனக்கு மட்டுமின்றி, அணியினருக்கும், நாட்டுக்கும் பேரிழப்பாகும். கொரோனா தடுப்பு பணிகளை அவுஸ்ரேலியா சுகாதார அமைப்புகள் மிகவும் சிறப்பாக செய்து வருகின்றன. இதனால் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அரசு எடுத்து வரும் சிறப்பான நடவடிக்கை காரணமாக இந்திய அணியினர் எதிர்வரும் காலத்திற்கு முன்பாக நிலைமை சீராகி விடும் என்று நம்புகிறேன்’ என கூறினார்.

25 வயதான துடுப்பாட்ட சகலதுறை வீரரான மார்னஸ் லபுஸ்சேன், 14 டெஸ்ட் போட்டிகளில் 1 இரட்டை சதம், 4 சதங்கள், 8 அரைசதங்கள் அடங்களாக 1459 ஓட்டங்களையும், ஏழு ஒருநாள் போட்டிகளில் 1 சதம், 2 அரைசதங்கள் அடங்களாக 305 ஓட்டங்களையும் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.