தமிழ் புறக்கணிப்பு: கிளிநொச்சியில் ஆசிரியர்களுக்கான அடையாள அட்டை வழங்கல் நிறுத்தம்!
கிளிநொச்சி கல்வி வலயத்தினால் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுவந்த அடையாள அட்டைகள் இன்றுமுதல் நிறுத்தப்பட்டுள்ளன.
குறித்த அடையாள அட்டைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே விபரங்கள் உள்ளநிலையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பாக ஊடகங்களில் நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளரினால் ஆசிரியர்களுக்கான அடையாள அட்டை விநியோகம் இன்று (வியாழக்கிழமை) முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, ஆசிரியர்கள் கடந்த பல மாதங்களுக்கு முன்னரே அடையாள அட்டைக்காக வலயக் கல்விப் பணிமனையில் விண்ணப்பங்களை சமர்ப்பித்தபோதும் அவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்படவில்லை என ஆசிரியர் தரப்பால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தமது தொழிலை உறுதிப்படுத்த ஆசிரிய அடையாள அட்டைகள் இல்லாதமையால் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அதுதொடர்பாக பல தடவைகள் வலயக் கல்விப் பணிமனைக்கு அறிவித்ததாகவும் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், அடையாள அட்டைகள் விடயத்தில் தொடர்ந்தும் அசமந்தப்போக்கே உள்ளதாகவும் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும்போது கற்பித்தல் செயற்பாட்டுக்குச் செல்வதற்கு தமக்கு அடையாள அட்டை கட்டாயம் தேவைப்படும் என்பதால் தமக்கான அடையாள அட்டைகளை விரைந்து வழங்குவதற்கு வலயக் கல்விப் பணிமனை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரியுள்ளனர்.
இதேவேளை, அடையாள அட்டை வழங்கப்படாமை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கவனத்திற்கும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கொண்டுசென்றுள்ளனர்.
இதனிடையே, ஊடகங்களில் செய்திகள் வெளியானமை குறித்து ஆசியர்களிடம் அதிகாரிகள் சிலர் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு ஊடகத்திற்கு செய்தி வழங்கியவர் யார்? என விசாரித்து வருவதாகவும் அறிய முடிகிறது.
கருத்துக்களேதுமில்லை