ஜனாதிபதி செயலாளரின் மே மாத சம்பள கோரிக்கை நியாயமற்றது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்!
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளை நாம் நன்கு அறிவோம். இத்தகைய சூழ்நிலைகள் எமக்கொன்றும் புதிதல்ல. லட்சக்கணக்கான மக்கள் மரணித்து, வாழ்விழந்து நிர்க்கதியாகியுள்ள நிலையில் அதிபரோடும், ஆசிரியர்களோடும் இணைந்திருந்த பல்லாயிரம் குடும்பங்களை பராமரித்து உதவிசெய்த பக்குவம் எமக்கு நிறையவே உள்ளது.
இந்நிலையில் தற்போதைய சூழ்நிலைகளுக்காக ஜனாதிபதியின் செயலாளர் எமது ஒரு மாத வேதனத்தைக் கோருவது நியாயமாது அல்ல.
அபாயகரமான சூழ்நிலைகளை அறிந்ததும் அதிபர்கள், ஆசிரியர்கள் அனைவரும் வீடுகளில் முடங்கினர். ஏதோ வழிகளில் தமது பாடசாலை சார்ந்த பிள்ளைகளின் குடும்பங்களுக்கும் ஏனைய வறிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கும் தமது வேதனத்தில் பெரும்பகுதியைச் செலவுசெய்து பேருதவி புரிந்துள்ளனர். இப்போதும் அதனைச் செய்தவண்ணம் உள்ளனர். அதுமட்டுமன்றி தம்மோடு தொடர்புடைய கொடையாளர்களுக்கூடாக பல உதவிகளை நெறிப்படுத்தி வருகின்றனர்.
இவற்றை அறிந்திராத ஜனாதிபதியின் செயலாளர் அவர்கள் எம்மிடம் ஒருமாத வேதனத்தைத் கோருவது நியாயமில்லை, என்பதற்கு அப்பால் அரசாங்கத்திற்கு வேறு வழிகளில் கிடைக்கும் உதவிகளையும், இறக்குமதிகளால் கிடைக்கும் வருமானத்தையும் கணக்கீடு செய்ய வேண்டும்.
ஆசிரியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்படுவதில்லை. இதைவிட விடுபட்ட கல்விக்காலங்கைளைப் பூரணப்படுத்துவதற்கு மேலதிக கொடுப்பனவுகள் எவையும் வழங்கப்படுவதும் இல்லை. ஏனைய அரச ஊழியர்களுக்கு அவ்வாறல்ல. அவர்கள் மேலதிகமாக செய்கின்ற ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் விசேட கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.
உண்மையில் தற்போது ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற வேதனம் அவர்களின் வாழ்க்கைக்கே போதுமானதாக இல்லை. இடர்க்காலங்களில் அதிக விலை கொடுத்தே பொருட்களைக் கொள்வனவு செய்தமை எல்லோரும் அறிந்த விடயம். பெரும்பாலான ஆசிரியர்கள் வங்கிக்கடன் செலுத்துவதற்கே பெரிதும் அவஸ்தைப்படுகின்றனர்.
இவ்வாறு அவ்விறிக்கையில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை