கொரோனா குறித்த பி.சி.ஆர். சோதனைகள் சில தவறானவை- ரவி குமுதேஷ்
கொரோனா வைரஸ் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பல பி.சி.ஆர் சோதனைகள் தவறானவை என, இலங்கை அரச மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடந்த 5ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட நான்கு PCR சோதனைகள் உட்பட அண்மையில் மேற்கொள்ளப்பட்ட 13 PCR சோதனைகளின் முடிவுகள் பிழையாக அமைந்தன.
உயிரிழந்த மோதரையினைச் சேர்ந்த 52 வயதான பெண், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட தரத்திலுள்ள தாதி அலுவலர், கொலன்னாவை – சாலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர், ராஜகிரிய – பண்டாரநாயக்கபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆகிய நால்வருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக அறிக்கைகள் வழங்கப்பட்டிருந்தன.
எனினும் குறித்த நால்வரின் அறிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் கீழுள்ள ஆய்வுகூடங்களில் மேற்கொண்ட பரிசோதனைகளில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
அத்துடன் அண்மையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த 8 சோதனைகள் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட 4 சோதனைகள், சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சோதனை உள்ளிட்ட 13 PCR சோதனைகளில் தவறு இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு வழங்கப்பட்டுள்ள சோதனை அறிக்கை முடிவுகள் காரணமாக, வைத்திய ஆய்வுகூட அறிக்கைகள் மீதான நம்பிக்கை மற்றும் அதன் தொழில்நுட்பவியலாளர்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை கேள்விக்குறியாகியுள்ளது.
சுகாதார அமைச்சின் கீழுள்ள எந்தவொரு ஆய்வுகூடத்திலும் இவ்வாறான பிழையான அறிக்கை வழங்கப்படவில்லை. தற்போது PCR பரிசோதனைகளை மேற்கொள்வது தொடர்பில் சுகாதார அமைச்சின் கீழ் 10 ஆய்வுகூடங்கள் செயற்படுகின்றன. அவற்றில் சுமார் 200 தொழில்நுட்ப நிபுணர்கள் இதற்காக தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறான தொற்றுநோய் பரவலின்போது, அதற்கு அவசியமான ஆய்வுகூட வசதியை வழங்குவதற்கான பொறுப்பு, அது தொடர்பில் விசேட சம்பளத்தை பெறுகின்ற விசேட வைத்திய நிபுணர்கள், பணிப்பாளர்களுக்கே உள்ளன.
அவர்கள் இவ்விடயத்தை உரிய முறையில் மேற்கொள்ளாவிடின், அவர்கள் தங்களது பொறுப்பிலிருந்து விலகியதாக கருதி நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுகின்றோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை