அரச ஊழியர்களின் வயிற்றிலடிப்பதை அரசு நிறுத்த வேண்டும்! – முன்னாள் பா. உ இம்ரான் மக ரூப்
-ஹஸ்பர் ஏ ஹலீம்_
அரச ஊழியர்களின் வயிற்றிலடிப்பதை அரசு உடன் நிறுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மக ரூப் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று (08)கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:
அரச ஊழியர்களுள் பெரும்பாலானவர்கள் அவர்களது சம்பளத்தில் குடும்பத்தினைப் பராமரிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருபவர்கள். பெறுகின்ற சம்பளத்தை விட அதிக செலவுகளுக்கு முகங் கொடுப்பதால் அவர்களத மாதாந்த பட்ஜட் துண்டு விழுந்து கொண்டே வருகின்றது.
இந்நிலையில் நாட்டுநலன் கருதி கடந்த மாதம் எல்லா அரச ஊழியர்களும் தமது ஒரு நாள் ஊதியத்தை அரசுக்கு நன்கொடையாக வழங்கினார்கள். இது அரச ஊழியர்கள் செய்த பெருந்தியாகம். இந்த தியாகத்தை அரசு பலவீனமாக நினைக்கக் கூடாது.
தொடர்ந்து அரச ஊழியர்களின் சம்பளத்தில் கைவைக்கும் மனோநிலையை அரசு மாற்ற வேண்டும்.
கொழும்பில் குளிரூட்டப்பட்ட அறைக்குள் இருந்தால் அரச ஊழியர்கள் படும் கஷ்டங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் தான் இருக்கும். அரச ஊழியர்கள் மட்டத்திற்கு இறங்கி அவர்கள் படும் கஷ்டத்தை உணர்ந்து சில முடிவுகளை எடுக்க வேண்டும்.
அரச ஊழியர்களின் கஷ்டங்களை நன்கு உணர்ந்த எமது முன்னைய அரசு ரணுகே ஆணைக்குழுவின் சிபார்சின் படி இந்த ஆண்டு ஜனவரி முதல் சகல அரச ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பை வழங்க ஏற்பாடு செய்திருந்தது. இந்த அரசு வந்தவுடன் செய்த முதல் வேலை அந்த சம்பள அதிகரிப்பை நிறுத்தியதுதான்.
அதேபோல பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கு கடந்த ஜனவரி முதல் விசேட கொடுப்பனவு வழங்குதற்கான சுற்றறிக்கையை எமது அரசு வெளியிட்டிருந்தது.
இந்த அரசு அந்த சுற்றறிக்கையையும் இரத்து செய்தது.
இவ்வாறு அரசு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டியதை தடுத்து நிறுத்திவிட்டு இப்போது அவர்கள் பெறுகின்ற குறைந்த சம்பளத்தில் மீண்டும் கை வைப்பது அரச ஊழியர்களின் நிலையை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளிவிடும். இதனை அரசு சிந்திக்க வேண்டும்.
இலங்கையின் வரலாற்றில் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 100 வீதத்தால் அதிகரித்த ஒரே அரசு எமது முன்னைய அரசு தான். இந்த அதிகரிப்பும் போதாது என்பதால் தான் ரணுகே ஆணைக்குழுவின் சிபார்சின் படியான சம்பள அதிகரிப்பையும் வழங்க நாம் ஏற்பாடு செய்திருந்தோம்.
இவை எல்லாவற்றையும் தடுத்து நிறுத்திய இந்த அரசு அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தில் தங்கி வாழ விரும்பும் மனோநிலையை மாற்ற வேண்டும். அரச ஊழியர்களின் சயகௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களது சம்பளத்தில் உதவி கேட்கும் போக்கை கைவிட வேண்டும் என்று கூறினார்.
கருத்துக்களேதுமில்லை