20 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் தீ விபத்து!

(க.கிஷாந்தன்)

அட்டன்  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டிக்கோயா மணிக்கவத்தை 3ம் பிரிவு தோட்டத்தில் 20 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் 09.05.2020 அன்று மதியம் 1 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகின.

இதனால் 89 இற்கும் மேற்பட்டவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர். இவர்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உரிய இடமொன்றில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

ஊரடங்கால் மக்கள் வீட்டுக்குள் இருக்கையில் திடீர் தீபரவல் ஏற்பட்டதால் மக்கள் பதறியடித்துக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு ஓடிவந்தனர்.

இதனையடுத்து பிரதேச மக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினர்.

இதற்கிடையில் அப்பகுதியில் மக்கள் குவிந்ததால், சமூக இடைவெளியை பின்பற்றி உரிய வகையில் இருக்குமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது.

இத்தீவிபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாதபோதிலும், பெருமளவில் பொருட் தேசங்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன என்று மக்கள் தெரிவித்தனர். ஒரு சில பொருட்கள் மாத்திரமே மக்களால் பாதுகாக்ககூடியதாக இருந்தது.

நோர்வூட் பிரதேச சபையின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவு பொருட்கள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் தெரிவித்தார்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியபபடவில்லை. பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.