இயல்புநிலை திரும்புகின்றது என்றாலும் அவசியமெனில் மட்டுமே வெளியே வரவேண்டும்! யாழ். மாவட்ட செயலர் மகேசன் கோரிக்கை
“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டு மாதங்களின் பின்னர் இயல்புநிலை திரும்புகின்றது என்றாலும், பொதுமக்கள் அத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே வீடுகளிலிருந்து வெளியே வரவேண்டும். ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா ஆபத்து இன்னமும் நீங்கவில்லை என்பதை மக்கள் மனதிலிருத்த வேண்டும்.”
– இவ்வாறு யாழ்ப்பாண மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“கொரோனா அபாயம் இன்னமும் நீங்கவில்லை. நாம் இன்னமும் அவதானமாக இருக்க வேண்டிய காலகட்டத்தினுள் செல்கின்றோம். வேறு இடங்களிலிருந்து ஆள்கள் வரக் கூடும். அது தொடர்பில் சுகாதாரத் தரப்பினருக்கு அறிவிக்கப்பட வேண்டும். இயல்புநிலைக்குத் திரும்புவதாக இருந்தாலும் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மாத்திரமே வீட்டுக்கு வெளியே வரவேண்டும்.
சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய பொதுப் போக்குவரத்து, வர்த்தகர்கள், சிகை அலங்கரிப்பாளர்கள், உணவக உரிமையாளர்கள் சுகாதார நடைமுறையை பின்பற்றி பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் தமது அன்றாடச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை