சுமந்திரனின் கருத்துத் தொடர்பில் கூட்டமைப்பு தீர்மானம் எடுக்கும்! என்கிறார் மாவை சோ.சேனாதிராசா
தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றியும் அவர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
ஆயுதப் போராட்டம் பற்றி சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், சுமந்திரனின் கருத்து தொடர்பாக கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளும் கண்டணங்களையும், விமர்சனங்களையும் பதிவு செய்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையி, “விடுதலைப்புலிகள் பற்றி சுமந்திரன் பேட்டியில் சிங்கள மொழியில் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிராக எம்மிடம் கண்டனங்களும் விமர்சனங்களும் தெரிவிக்கப்படுவதாலும் இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய தேவையும் நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கமும் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் தெரிவித்த கருத்தின் மீது கண்டனம் தெரிவித்துள்ளது. அது போல தமிழீழ விடுதலைக் கழகமும் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.
கடந்த 08 ஆம் திகதி அன்று ஆக இருக்க வேண்டும் சிங்கள ஊடகத்தில் விடுதலைப் புலிகள் தொடர்பில், விடுதலைப் புலிகளையும், ஆயுதப் போராட்டங்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சுமந்திரன் வெளியிட்ட கருத்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை. கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்து கொண்டு தெரிவித்த கருத்துக்கள் தனிப்பட்ட கருத்தாகவும் ஏற்றுக் கொள்ளமுடியாது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற ஆயுதப் போரும், போர் நிறுத்தமும், சர்வதேச அரங்கில் இலங்கை அரசுடன் ஒஸ்லோவில் பேச்சுவார்த்தை நடத்த உடன்பட்ட காலத்தில் ஜனநாயகக் கோட்பாட்டில்; இயங்கி வந்த தமிழர் விடுதலைக் கூட்டணி அப்பேச்சு வார்த்தையில் பங்கு கொண்ட விடுதலைப்புலிகளை அங்கீகரித்து நின்ற காலத்திலிருந்துதான் இலங்கை இனப்பிரச்சனை சர்வதேசத்திலும் அரசியல் விடுதலைப் பரிணாமத்தைப் பெற்றது.
அந்த ஒஸ்லோ உடன்படிக்கையின் அம்சங்களை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கைகளையே 2004முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுத் தேர்தல்களில் பெரு வெற்றி பெற்று வருகிறது.
2004 பொதுத் தேர்தலில் வடக்குக் கிழக்கில் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச்சின்னம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் சின்னமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2009 போர் முடிந்த பின் 2010 பொதுத் தேர்தலிலும் தேசியக் கூட்டமைப்பு பெருவெற்றி பெற்றது. 2011 ஒக்டோபர் 24முதல் 27 வரை அமெரிக்க இராஜாங்க அமைச்சின் அழைப்பின் பேரில் வாசிங்டனில் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அமெரிக்க இராஜாங்க அமைச்சுடன் பேச்சில் ஈடுபட்டனர்.
இறுதியில் 2012 மார்ச்சில் நடைபெறவிருந்த ஐ.நா.மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டிய இலங்கை அரசுக்கெதிரான போர்க்குற்ற விசாரணைக்கான பிரேரனை தயாரிக்கப்பட்டது. தமிழின விடுதலைக்கான போர் இலங்கை அரசு இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலேயே நடைபெற்றது.
2011 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் 2013 மாகாணசபைத் தேர்தல்களில் 2015 பொதுத் தேர்தல்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் போராளிகள், ஆதரவாளர்களின் ஆதரவுடனேயே வெற்றிகள் ஏற்பட்டன.
எனவே தென்னிலங்கையில் பௌத்த சிங்கள ஒற்றையாட்சி, பெரும்பான்மைத்துவ ஆட்சிச் சித்தாந்தத்துடன் எழுச்சி பெற்று வரும் அரசியல் இராணுவச் சூழ்நிலையில் தமிழ்ப் பேசும் மக்கள், அரசியல், சமூக அமைப்புக்கள் ஒன்றுபட்டு எழுச்சி பெற வேண்டியதே இன்று வேண்டியதாகும்.
ஜனநாயக அரசியலில் அதுவும் விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணித்து நிற்கும் மக்களிடம் கருத்து வேற்றுமைகளில் இணக்கத்தை உருவாக்கி பிளவுகளுக்கு இடமளிக்காமல் நம்பிக்கையை ஏற்படுத்துவதே சிறப்பானதாகும்.
விரைவில் தமிழரசு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமைகள் ஒன்று கூடி மேற்கொண்டு செயல்பட வேண்டிய தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனக் கருதியுள்ளோம்” என்றுள்ளது.
கருத்துக்களேதுமில்லை