சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்து கூட்டமைப்பின் நிலைப்பாடு அல்ல – கஜேந்திரகுமாருக்கு சம்பந்தன் பதிலடி
“தமிழினத்தின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்துக்களையும், அது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ள பதில் கருத்துக்களையும் நான் இன்னமும் முழுமையாகப் பார்க்கவில்லை. எனினும், கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் வெளியிடும் சொந்தக் கருத்துக்களை கூட்டமைப்பின் கருத்தாக அல்லது கூட்டமைப்பின் நிலைப்பாடாக எவரும் எடுக்கக்கூடாது.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் உட்பட தமிழின விடுதலைக்காக ஆயுத ரீதியில் முன்னெடுக்கப்பட்ட அனைத்துப் போராட்டங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சிங்கள மொழியிலான செவ்வியொன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார். இதையடுத்து, ‘சுமந்திரனே கூட்டமைப்பின் பேச்சாளர். எனவே, ஆயுதப் போராட்டத்தைத் தவறு என்று கூறும் அவரின் கருத்து கூட்டமைப்பின் கருத்தே. அதையே நாம் உத்தியோகபூர்வமான கருத்தாகவும் கொள்ளவேண்டும்’ என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருந்தார்.
இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை