ஆளும்தரப்புடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பது நோக்கமல்ல – ஐ.தே.க.
ஆளும்கட்சியுடன் கூட்டணி அமைத்து ஒரு தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பது என்ற கருத்தினை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் மறுத்துள்ளார்.
மேலும் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதில் மட்டுமே அக்கறை காட்டுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தலுக்கு முன்னதாகவோ அல்லது அதற்கு பின்னரோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஒரு தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், “ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ஒரு தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனை எங்களுக்கு இருந்தது. தேர்தலுக்கு பின்னரும் அரசாங்கத்தை தொடர்ந்தும் கொண்டு செல்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தது.
நாங்கள் அவ்வாறு செய்திருந்தால், இப்போது ஆட்சியில் இருந்திருப்போம். எவ்வாறாயினும், எங்கள் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் செல்லவோ அல்லது தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கோ எங்களுக்கு விருப்பமில்லை” என கூறினார்.
இதற்கிடையில், கொரோனா வைரஸிற்கு எதிரான போராடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை ஆதரவினை வழங்க முடிவு செய்துள்ளது, ஏனெனில் நாடு குறிப்பாக தேசிய பொருளாதாரத்தில் நெருக்கடியை எதிர்கொண்டமையினால் அந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.
மேலும் இந்த மோசமான சூழ்நிலையிலிருந்து அரசியல் இலாபத்தினை அடைய நாங்கள் விரும்பவில்லை. இந்த நேரத்தில் நாடு எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள எதிர்கால ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் செயற்படும் என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை