தமிழர் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தியது விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம்தான்: மறுப்புக்கு இடமில்லை- சீ.வீ.கே.

தமிழர் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தியது விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம்தான் எனத் தெரிவித்துள்ள வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஆயுதப் போராட்டத்துடன் அரசியல், இராஜதந்திர அணுகுமுறைகளும் அவர்களிடம் இருந்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 8ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் Truth With Chamuditha என்பவருக்கு வழங்கிய நேர்காணல் மிகப்பெரும் சர்ச்சையை தமிழ் தேசிய அரசியல் பரப்பில் உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள சீ.வீ.கே. சிவஞானம்,  “எனது கருத்து சுமந்திரனின் சிங்கள மொழியிலான பேட்டியை முழுமையாகப் பார்த்து, கேட்ட பின்னரானது என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சுமார் 20 நிமிடங்களுக்கு மேலான இப்பேட்டியில், ஊடகவியலாளர் அறிமுகம் செய்யும்போது ‘யாழ்ப்பாண மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பராளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரன் என்றே அறிமுகம் செய்துள்ளார். எந்தச் சந்தர்ப்பத்திலும் அவரை கூட்டமைப்பின் பேச்சாளர் என்று அறிமுகம் செய்யவில்லை. சுமந்திரனும் அவ்வாறு கூறவில்லை.

ஆகவே, இப்பேட்டியில் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்துக்களே தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பினதோ, தமிழரசுக் கட்சியினதோ அல்ல என்பது தெளிவானது.

அவரது கருத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் தமிழரசுக் கட்சியினதும் கருத்தாக சிலர் விமர்சிக்க முனைவது பொருத்தமற்றதும் தவறானதுமாகும்.

இந்தப் பேட்டியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய விடயம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புத் தொடர்பானது.

‘நீங்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அரசியல் போராட்டம் மற்றும் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளும் ஒருவரா’ என்ற கேள்விக்குப் பதிலளித்த சுமந்திரன், ‘இல்லை நான் ஏற்றுக்கொள்ளவில்லை’ எனப் பதிலளித்தபோது ஊடகவியலாளர் ‘ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லையா’ என வினவியபோது,

‘நான் இதை யாழ்ப்பாணத்திலும் சொல்கிறேன். ஏனைய இடங்களிலும் சொல்கிறேன். ஆனால் எனக்கு எதிர்ப்புக்கள் உள்ளன. ‘அவர்கள் எங்களுக்காகத்தானே போராடினார்கள். ஏன் ஏற்றுக்கொள்கிறீர்கள் இல்லை’ என என்னோடு முரண்படுகின்றனர். அதற்குக் காரணம் நான் ஆயுதப் போராட்டம் ஒன்றை ஒருபோதும் ஆதரிப்பவன் அல்லன் என்பதுதான்’ என சுமந்திரன் பதிலளிக்கிறார்.

இங்கே முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியது கேள்வியாளர் தேசியத் தலைவரது அரசியல் போராட்டம் (தேசபாலன வியாபாரய) மற்றும் ஆயுதப் போராட்டம் (சன்னத்த வியாபாரய) ஆகிய இரண்டு போராட்டங்கள் பற்றி கேள்வியெழுப்பியபோது இரண்டையும் நிராகரித்த சுமந்திரன் ஆயுதப் போராட்டம் பற்றி மட்டுமே பதிலளித்துள்ளார்.

தமிழின வரலாற்றில் விடுதலைப் போராட்டத்தின் அரசியல் போராட்டம் மிகவும் இன்றியமையாத அம்சமாக எப்பொழுதும் இருந்துள்ளது. அந்த அம்சம் தொடர்பாக பதிலளிக்காமல் ஆயுதப் போராட்டம் குறித்து மட்டும் சுமந்திரன் பதிலளித்தமை இந்த சர்ச்சைக்கான காரணியாக அமைந்துள்ளதாகவே நான் கருதுகிறேன்.

1970களின் பிற்பகுதியில் முனைப்புப்பெற்ற இளைஞர்களின் விடுதலைப் போராட்டங்கள் யாவும் 14.05.1976 இல் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தனித் தமிழீழ விடுதலைக்கான தீர்மானத்தின் அடிப்படையிலேயே எழுச்சிபெற்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமது நிலைப்பாட்டை, வெளிப்பாட்டை, தெளிவுபடுத்தி வந்துள்ளார்.

‘ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஓர் உண்மையான பௌத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தியிருக்கவேண்டி ஏற்பட்டிருக்காது’ என்றும் ‘நாம் ஆயுதப் போராட்டத்தை விரும்பி வரித்துக்கொண்டவர்கள் அல்லர்’ என்றும் இலங்கை இராணுவத்தினதும் அரசினதும் அடக்குமுறையிலிருந்து தற்காத்துக்கொள்ளவே ஆயுதம் ஏந்தினோம் என்றும் ‘போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது இலட்சியமும் இலக்கும் மாறாது’ என்றும் கூறியவர் தேசியத் தலைவர் பிரபாகரன்.

ஜனநாயக அரசியலை ஆயுதப் போராட்டத்துடன் சமமாகவே தேசியத் தலைவர் நோக்கினார் என்பதற்கு பல சான்றுகள் உண்டு. உதாரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கு முன்னே 1991இல் ஈரோஸ் பட்டியலில் என்னையும் வேறு சிலரையும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிப்பித்து பிரேமதாசவுடன் பேச்சுவார்தை நடத்த அனுப்பிவைத்தவர்.

‘நாங்கள் நெடுக அடிபட்டுக்கொண்டிருக்க முடியாது. ஜனநாயக அரசியலிலும் ஈடுபடவேண்டும்’ என அப்போது அவர் என்னிடம் கூறியமையையும் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.

மிதவாத அரசியலை தமிழ் அரசியல் கட்சிகள் முன்னெடுத்தபோது ஆயுதமேந்திய போராட்டத்தை விடுதலைப் புலிகள் முன்னெடுத்த நிலையில் இரண்டு துறையும் ஒன்றிணைந்து செயற்படுவதன் அவசியம் கருதியே சில முக்கிய அரசியல் கட்சிகளை ஒன்றுசேர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினை விடுதலைப் புலிகள் உருவாக்கியமை வரலாறு. அதன் பெறுபேறுதான் 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்ற அதியுச்சமான 22ஆசனங்கள் ஆகும்.

சுமந்திரன் குறித்த பேட்டியில் கேட்கப்பட்ட தேசியக்கொடி, சமஷ்டி முறைமை போன்றவற்றுக்கு விளக்கமளித்தது போன்று தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான இந்தக் கேள்விக்கு விளக்கமளித்திருந்தால் பிரச்சினை எழுந்திருக்காது.

கி.ஆ.பே.விசுவநாதன் போன்ற தமிழ் அறிஞர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் தலைவர்களில் ஒருவர் பிரபாகரன் என்று சிலாகித்து பெருமைப்படுத்திய தேசியத் தலைவரின் பெயரை உள்ளடக்கி எழுப்பிய கேள்விக்கு மூன்று சொல்லில் ‘நான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை’ எனக் கூறியதே சர்ச்சைக்குரியதாகிறது. தமிழ் மக்களின் நியாயப்பாட்டை துணிந்து கூறியிருக்கவேண்டும்.

இலங்கைக்குள்ளேயே முடங்கிக் கிடந்த எமது அரசியல் போராட்டத்தை தந்தை செல்வநாயகம் மற்றும் அமரர் அமிர்தலிங்கம் போன்றவர்கள் இந்தியாவரை முன்னெடுத்தபோது அதனை சர்வதேச மயப்படுத்தியது விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம்தான் என்பதை எவரும் மறுக்கமுடியாது.

ஆயுதப் போராட்டம் ஒன்றும் உலகக்கு புதிதானது அல்ல. பலநாடுகளின் வரலாறு ஆயுதப் போராட்டங்களுடன்தான் தொடர்புபட்டது. அதுவும் எமது போராட்ட வடிவங்களில் ஒன்றாக இருந்தது. அதேநேரம் அரசியல், இராஜதந்திர அணுகுமுறைகளையும் விடுதலைப் புலிகள் முன்னெடுத்தே வந்துள்ளனர் என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

ஆயுத வடிவப் போராட்டத்தில் சுமந்திரன் உடன்படாதிருக்கலாம். அது அவரது தனிப்பட்ட உரித்தாக இருக்கலாம். அந்தப் போராட்டத்தின் மூலம் தமிழ் தேசிய இனத்தின் விடுதலை வேட்கை வெளியுலகுக்கு பகிரப்பட்டு ஆதரவுபெற்ற நிலையோடு தொடர்புபட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்துகொண்டு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறுவதை நிச்சயமாகத் தவிர்த்திருக்கலாம். தவிர்த்திருக்க வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் இலங்கை தமிழரசுக் கட்சியையும் பொறுத்தவரை விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் மூலம் உலக மயப்படுத்தப்பட்ட அரசியல் நிலைப்பாட்டிலேயே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஜனநாயக ரீதியாகப் பயணிப்போம் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.