அரசியல் கைதிகளின் விபரங்களை மஹிந்தவிடம் கையளித்தார் டக்ளஸ்!
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக நெட்டகாலமாக பேசப்பட்டுவந்த நிலையில் அவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய மகஜர் ஒன்றினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையலான சந்திப்பொன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) விஜேராமை உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
வடக்கிலுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் விசேடமாக மீனவ மக்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் தொடர்பாக இதன்போது கவனஞ் செலுத்தப்பட்டதுடன், வடக்குத் தமிழ் சிறைக் கைத்திகள் தொடர்பாக அரசாங்கம் என்ற வகையில் அனுதாபத்துடன் கூடிய நடைமுறையொன்றைப் பின்பற்றுமாறு டக்ளஸ் தேவானந்தா பிரதரிடம் கோரிக்கை விடுத்தார்.
மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது கவனஞ் செலுத்தப்பட்டதுடன், ஒலுவில் துறைமுகத்தை மீன்பிடித் துறைமுகமாக மாற்றியமைப்பதன் ஊடாக வடக்கு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அந்த வேலைத்திட்டம் காலத்திற்குப் பொருத்தமானது என்பதால் அதற்குத் தேவையான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ஏற்புடைய பிரிவுகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
இலங்கையில் ஆறு டின் மீன் தொழிற்சாலைகள் இயங்குகின்ற போதிலும், அந்த தொழிற்சாலைகளை நடாத்திச் செல்வதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பிரதமரிடம் சுட்டிக் காட்டினார்.
இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களுக்கான வரி குறைக்கப்படுமாயின் அதன் காரணமாக உள்நாட்டு டின் மீன் உற்பத்தியாளர்கள் சிக்கலான நிலைமைக்கு முகங்கொடுப்பதாக இதன்போது டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டதுடன், எதிர்காலத்தில் உள்நாட்டு டின் மீன் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடி, அவர்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக பிரதமர் தெரிவித்தார்.
கடற்றொழில் அமைச்சினால் செயற்படுத்தப்படும் மீன்பிடிக் கிராமங்கள் வேலைத்திட்டத்தினை மேலும் ஒழுங்குபடுத்தி முன்னெடுத்துச் செல்வது காலத்திற்குப் பொருத்தமானது என இதன்போது பிரதமர் தெரிவித்தார்.
மீன்பிடிக் கிராமஙகள் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் சென்று மீனவர்களுக்கு வீடுகளை வழங்கும் திட்டமொன்றைத் தயாரிக்குமாறு வீடமைப்பு அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் அச்சந்தர்ப்பத்திலேயே அறிவுறுத்தல் வழங்கினார்.
மீன்பிடி நடவடிக்கைகளை இலகுபடுத்தி, பணக் கொடுக்கல் வாங்கல்களுக்காக மீனவர்களுக்கென தனியான வங்கியொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் கவனஞ் செலுத்துமாறு இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தனர்.
கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக கொழும்பு தங்குமிடங்களில் சிக்கியுள்ள வடக்கு மக்கள் தொடர்பாகவும் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், தற்போது தனது அறிவுறுத்தலின்படி பிரதம அமைச்சர் அலுவலகத்தின் தலையீட்டுடன் கொழும்பு நகரில் தங்குமிடங்களில் சிக்கியுள்ள மக்கள் கிராமங்களுக்குச் செல்வதற்குத் தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
விசேடமாக தெஹிவலை, இரத்மலானை, கல்கிசை ஆகிய பிரதேசங்களில் தங்குமிடங்களில் சிக்கியிருந்தவர்களைக் கிராமங்களுக்கு அனுப்பிவைக்கும் செயற்பாடு இறுதிக் கட்டத்தில் காணப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை