மன்னார் நகர சபையின் அபிவிருத்தி திட்டங்களை சிலர் தடுக்க முயற்சி- நகர முதல்வர்

மன்னார் நகர சபையின் அபிவிருத்தி திட்டங்களை அரசியல்வாதிகளான சட்டத்தரணிகள் சிலர் தடுத்திருக்கின்றார்கள் என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் மன்னார் நகரத்தை அழகுபடுத்தி பல்வேறு கட்டடங்களை அமைத்து நகரசபைக்கு வருமானத்தை ஈட்டி வருமானத்தின் ஊடாக நகரத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்கின்ற ஒரு திட்டத்தை முன்னெடுத்துக் கொண்டு இருக்கின்ற சந்தர்ப்பத்தில் இவ்வாறு தடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் நகர சபையின் விசேட அமர்வு இன்று (புதன்கிழமை) நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது நகரசபையின் செயலாளர், உப தலைவர், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்டு அவர் உரையாற்றுகையில், “குறித்த அமர்வில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் மன்னார் நகரத்தின் அபிவிருத்தியை மையப்படுத்தி பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

அதனடிப்படையில் அதற்கான இட ஒதுக்கீடு செய்ய வேண்டிய காரணத்தினால் சபையின் தீர்மானத்திற்கு அமைவாக சட்ட விரோதமாக அங்காடி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த அனைத்து கடைகளும் அகற்றப்பட்டு அதற்கான மாற்று இடங்களும் வழங்கப்பட்டு துப்பரவுப் பணிகளை மேற்கொண்டு வந்தோம்.

இந்நிலையில் மன்னார் தனியார் வாடகை போக்குவரத்து சங்கம் என்கின்ற போர்வையில் ஒருசிலர் தமது சங்க கட்டடம் உடைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் எமக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

உண்மையில் அந்த இடம் மன்னார் நகர சபைக்குச் செந்தமானது. அபிவிருத்தி கருதி நாங்கள் வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வந்தோம்.

இந்நிலையில் நகரத்தின் அபிவிருத்தியை நிறுத்த வேண்டும், அபிவிருத்திக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்கின்ற ஒரு சில காரணத்தினால் சில அரசியல்வாதிகளாக இருக்கின்ற சட்டத்தரணிகள் அரசியல் ஆதாயத்திற்காகவும் அபிவிருத்தியை முடக்கவேண்டும் என்ற நோக்கத்தினாலும் இவ்வாறான வழக்கினை தாக்கல் செய்துள்ளனர்.

இதுகுறித்து, இன்றைய சபைக் கூட்டத்தில் ஏகமனதாக உறுப்பினர்கள் இணைந்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த வழங்கிற்கு எதிராக எமது சட்டத்தரணிகள் மற்றும் மேலதிகமாக சட்டத்தரணிகள் தேவைப்படும் பட்சத்தில் வெளிமாவட்டத்தில் இருந்து சட்டத்தரணிகளை அழைத்து நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம். வெளி மாவட்டத்தில் இருந்து சட்டத்தரணிகளை அழைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 550 மில்லியன் ரூபாய் நிதி உதவியுடன் மன்னார் நகரத்தை அழகுபடுத்தி பல்வேறு கட்டடங்களை அமைத்து நகர சபைக்கு வருமானத்தை ஈட்டி வருமானத்தின் ஊடாக நகரத்தை அபிவிருத்தி செய்யமுடியும் என்கின்ற ஒரு திட்டத்தை முன்னெடுத்துக் கொண்டு இருக்கின்ற சந்தர்ப்பத்தில் அரசியல்வாதிகளான சட்டத்தரணிகள் சிலர் இந்த வேலைத் திட்டங்களை தடுத்திருக்கின்றார்கள். குறித்த விடையம் எமக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்கு நல்லதொரு சேவையை செய்ய வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு, சபையை நாங்கள் பாரம் எடுத்து பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்ற நேரத்தில் எமக்கு இடையூறை ஏற்படுத்துகின்ற செயற்பாடாக நாங்கள் இதனைப் பார்க்கின்றோம்.

தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 550 மில்லியன் ரூபாய் நிதிக்கும் அமைக்கப்பட்டு வருகின்ற பேருந்து தரிப்பிடத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அரசியல்வாதிகளான சட்டத்தரணி தமது முகநூல் ஊடாக போலிப் பிரசாரம் செய்து வருகின்றார்.

இதேவேளை, நகர சபை உறுப்பினர்கள், மன்னார் தனியார் வாடகை போக்குவரத்துச் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு தமது கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.