நான் எதற்கும் அஞ்சேன்! நீதி கிடைப்பது உறுதி!! – ராஜித திட்டவட்டம்…
“நான் எக்காரணம் கொண்டும் எதற்கும் அச்சமடையமாட்டேன். அதனால்தான் விசாரணையை எதிர்கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகின்றேன். எனினும், எனக்கு நீதி கிடைப்பது உறுதி.”
– இவ்வாறு முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
வெள்ளை வான் கடத்தல் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான வழக்கில் பிணை இரத்தாகியதையடுத்து முன்னாள் அமைச்சர் ராஜித, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்றிரவு சரணடைந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். அதற்கு முன் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“வெள்ளை வான் கடத்தல் சாரதிகள் எனச் சொல்லப்பட்டோரால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் நான் கலந்துகொண்டமைக்காக என் மீது வேண்டுமென்றே வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. எனக்கு வழங்கப்பட்டிருந்த நீதிமன்றப் பிணை உத்தரவும் இரத்தாகியுள்ளது. இந்தநிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் என்னைக் கைதுசெய்வதற்கு முன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகின்றேன்.
என்னைக் கைதுசெய்வார்கள். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள். விளக்கமறியலில் வைப்பார்கள். இதற்கெல்லாம் நான் பயந்து மறைமுகமாக இருக்கமாட்டேன். எல்லாவற்றையும் சவாலுக்குட்படுத்தியே நான் விசாரணைக்காக முன்னிலையாகின்றேன்.
என்னை விளக்கமறியலில் வைத்தாலும் எனக்கு விரைந்து நீதி கிடைக்கும். இது உறுதி” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை