தோல்வியடைந்த சந்தர்ப்பங்களைப் பார்க்காது வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு அளிக்கப்படும்: மிக்கி ஆர்தர்

அணி தோல்வியடைந்த சந்தர்ப்பங்களைப் பார்க்காது வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு அளிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

‘நான் பயிற்றுவித்த ஒவ்வொரு வீரர்களையும் அவர்களது சிறந்த நிலை எதுவோ அதனை வெளிப்படுத்தும் வகையிலேயே பயிற்றுவித்திருக்கின்றேன். ஒருவர் சிறப்பாக செயற்பட அவருக்கு அடிமட்டத்தில் இருந்து பயிற்சிகள் தரப்பட வேண்டும். அடிமட்டம் எனப்படும் போது நுணுக்கங்களே வீரர் ஒருவரை சிறந்தவராக மாற்றும்.

அடுத்தது வீரர் ஒருவரை அவரது இயல்பு நிலையில் விளையாட அனுமதிக்க வேண்டும். அதாவது அவர்களால் எந்த அளவிற்கு சுதந்திரமான முறையில் விளையாட முடியுமோ அந்த அளவிற்கு அனுமதிக்க வேண்டும். நான் மூன்று வகைப் போட்டிகளுக்குமான அணிகளை பார்த்த நிலையில் அவற்றில் மாற்றங்கள் செய்ய வேண்டியது தெரியவருகின்றது. இந்த மாற்றங்களின் முடிவு அணிகளின் தரவரிசையில் தெரிய வரும்.

வீரர்கள் அவர்களுக்காக மாத்திரம் விளையாடக் கூடாது. உண்மையில், வீரர்களுக்கு அவர்களுக்கு அவர்களது திறமை மீதும் நம்பிக்கை வர வேண்டும். அதோடு, அவர்களுக்கு தேவையான ஆதரவும் தரப்பட வேண்டும். இதேநேரம் அவர்கள் தோல்வியடையும் சந்தர்ப்பங்களைப் பார்க்காது, அவர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும்’ என கூறினார்.

இதேவேளை முன்னதாக, சுகாதார அதிகாரிகளின் அறிவுரைகளுக்கு அமைய, மிகுந்த அவதானத்துடன் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளதாக, மிக்கி ஆர்தர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.