அழுக்கு படியாம முகத்தை காப்பாத்த இந்த நாலு விஷயம் செய்தா போதும்!

முகத்தை தூய்மையாக வைத்துகொண்டாலே முகப்பிரச்சனைகள் வராமல் தடுக்கமுடியும். முகத்தில் படியும் மாசுக்கள், அழுக்குகள் நிரந்தரமாக முகத்தில் தங்கிவிடாமல் பாதுகாக்க முகத்தில் இயற்கையாகவே எதிர்ப்பு குணங்கள் உண்டு. ஆனால் வெளியில் செல்லும் போது அதிகப்படியான தூசு, மாசு படியும் போது முகத்தில் சருமத்துளைகளில் அழுக்குகள் படிப்படியாக சேர்ந்து தங்கிவிடும். இவை அதிகரிக்காமல் இருக்க நீங்கள் அன்றாடம் நான்கு விஷயங்களை மட்டும் கடைப்பிடித்தால் போதும். அப்படி செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

க்ளென்சிங்

வெளிகாற்றில் அதிகமாக சுற்றும்போது சருமத்தில் இருக்கும் ஈரப்பதம் முற்றிலும் உறிஞ்சப்பட்டு சருமம் வறண்டு விடுகிறது. வறட்சியான சருமத்துக்குள் தீங்கு தரும் அழுக்குகள் சருமத்தின் மூன்று அடுக்குகளிலும் பாதிப்பை உண்டாக்குகிறது. இந்த பாதிப்பிலிருந்து முகத்தை மீட்க ஒரே வழி சருமத்தை ஈரப்பதமாக வைத்திருப்பது தான். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் வெளியிலிருந்து வந்தவுடன் சருமத்தை சுத்தம் செய்வது தான். இதை தான் க்ளென்சிங் என்று சொல்கிறார்கள்.

உங்கள் சருமம் எண்ணெய்பசையாக இருக்கிறதா, வறட்சியாக இருக்கிறதா, மென்மையானதா என்பதை பொறுத்து அதற்கேற்ற ஃபேஸ் வாஸ் பயன்படுத்தலாம்.

டோனர்

க்ளென்சிங் செய்தவுடன் வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டு டோனர் செய்வதும் முக்கியம். க்ளென்சிங் மூலம் திறந்த சருமத்துளைகளை டோனிங் மூலம் மூடிவிடுவதன் மூலம் அழுக்குகள் மீண்டும் துளைகளுக்குள் செல்லாமல் தடுக்கப்படுகிறது.

இதற்கு வெளியில் சென்று நீங்கள் தனி க்ரீம் வாங்க வேண்டியதில்லை. காய்ச்சாத பால் அல்லது பன்னீரை பஞ்சில் நனைத்து முகத்தை துடைத்தாலே அவை சிறந்த டோனர் தான். இவைதவிர மூலிகை டோனர் வகைகளும் பயன்படுத்தப்படுகிறது. இவை மேலும் சருமத்தின் உள்ளே இருக்கும் அழுக்கை அகற்றி சருமத்தை பொலிவாக்கவும், சருமத்துளைகளை மூடவும் உதவுகிறது.

ஸ்க்ரப்

சருமத்துக்கு க்ளென்சிங், டோனர் பயன்படுத்திய பிறகு ஸ்க்ரப் செய்வது அவசியம். ஸ்க்ரப் செய்வதன் மூலம் சருமத்தின் மூன்று அடுக்குகளிலும் சுத்தம் செய்வதோடு இறந்த செல்களையும் நீக்கமுடியும். இறந்த செல்கள் வெளியேறாமல் இருந்தாலும் முகத்தின் பளிச் தன்மை மாறக்கூடும். அதனால் அவ்வபோது ஸ்க்ரப் செய்து அதை வெளியேற்ற வேண்டும். வாரத்துக்கு இரண்டு முறையாவது ஸ்க்ரப் செய்யுங்கள்.

வீட்டில் இருக்கும் ஓட்ஸை பொடித்து பயன்படுத்தலாம். சர்க்கரை, கோதுமை தவிடு போண்ற பொருள்களை கொண்டு ஸ்க்ரப் செய்து மசாஜ் செய்தால் போதும்.

​மாய்சுரைசர்

மாய்சுரைசர் பயன்படுத்துவதற்கு பதில் எண்ணெய் கூட பயன்படுத்தலாம். இதை பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் மாசுக்கள் வந்து படிவதை அவை தடுத்துவிடுகின்றன. மேலும் சருமத்துக்கு ஈரப்பதம் தந்து வறட்சியிலிருந்தும் காக்கின்றன. மாய்சுரைசருக்கு பதிலாக வைட்டமின் இ ஆயில், ஆலிவ் ஆயில்,வைட்டமின் சி சீரம் கூட பயன்படுத்தலாம். வெயிலில் செல்லும் போது சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவதையும் பின்பற்றுங்கள். இதனால் சருமம் நிறம் மாறாமல் தடுக்கமுடியும்.

இவை தவிர வாரம் ஒருமுறை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தக் கூடிய ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துவதும் கூட முகத்துக்கு பாதுகாப்பு அளிக்ககூடியது தான். இதை தவறாமல் கடைபிடித்து வந்தாலே முகத்தில் அழுக்குகள் எப்போதும் தங்காமல் பாதுகாக்க முடியும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.