கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் ஹற்றனில் சிகையலங்கார நிலையங்கள் திறப்பு!
கடும் நிபந்தனைகளுடன் ஹற்றன் நகரிலுள்ள சிகையலங்கார நிலையங்களைத் திறப்பதற்கு இன்று (வியாழக்கிழமை) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை சிகையலங்கார நிலையங்களில் முடி மாத்திரமே வெட்டப்பட வேண்டும் என பொது சுகாதார வைத்திய அதிகாரிகளால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தொடர் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், சிகை அலங்கார நிலையங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் எவருக்கேனும் கொரோனா தொற்று ஏற்பட்டால் அது வேகமாக பரவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுகாதார அமைச்சால் விசேட வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. மும்மொழிகளிலும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றியே நடவடிக்கைகள் இடம்பெறவேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக ஹற்றன் நகரில் சிகையலங்கார நிலையங்களுக்கு வருபவர்களுக்கு கைகழுவுவதற்கு தேவையான வசதியை நிலையத்துக்கு முன்னால் செய்திருக்க வேண்டும், பாதணிகளை அகற்றிவிட்டே உள்ளே செல்ல வேண்டும், கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பது உட்பட சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், தொழிலில் ஈடுபடுபவர்களும் முகக்கவசம், கைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கடைக்குள் சமூக இடைவெளி பேணப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை