இன்னும் 2 வாரங்கள் அவதானம் அவசியம்! – இல்லையேல் பேராபத்து உறுதி – மக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
“நாட்டு மக்கள் அனைவரும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இல்லையேல் கொரோனா வைராஸால் பேராபத்து ஏற்படுவதைத் தவிர்க்க முடியாமல் போய்விடும்.”
– இவ்வாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மற்றும் கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது:-
“இலங்கையில் கொரோனா வைரஸால் அதிகமாகக் கடற்படையினர்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 925 தொற்றாளர்களில் 489 பேர் கடற்படையினர், 10 பேர் இராணுவத்தினர், ஒருவர் விமானப் படைச் சிப்பாய், 35 பேர் முப்படையினரின் உறவினர்கள், 3 பேர் வெளிநாட்டவர்கள், 45 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள், 67 பேர் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள், 276 பேர் பிரதேசங்களிலிருந்து தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட மக்கள்.
இந்தநிலையில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் எமது நடவடிக்கைகள் முன்னோக்கிச் செல்கின்றன. ஆனால், இன்னமும் கொரோனா வைரஸ் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.
மக்களின் அத்தியாவசிய சேவை கருதியே கொழும்பு, கம்பஹா தவிர ஏனைய 23 மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தியுள்ளோம்.
மக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசங்கள் அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.
மக்கள் அனைவரும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இல்லையேல் கொரோனா வைராஸால் பேராபத்து ஏற்படுவதைத் தவிர்க்க முடியாமல் போய்விடும்.
சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நிலைமை இலங்கையில் ஏற்படக்கூடாது என்பதே இங்குள்ள அனைவரினதும் பிராத்தனையாகும்.
போராலும் சுனாமியாலும் மனிதப் பேரழிவுகளைச் சந்தித்த எமது நாடு கொரோனாவாலும் அழிவுகளைச் சந்திக்கத் தயார் இல்லை” – என்றனர்.
கருத்துக்களேதுமில்லை