எதிர்காலத்தில் மேலும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்படலாம் – சஜித் தரப்பு குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்தமை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும் எதிர்காலத்தில் மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டதை அடுத்து, நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் கூட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்திய முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த  சம்பிக்க ரணவக்க, “முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து 2014 ல் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய அமைச்சர்களில் சேனாரத்னவும் ஒருவர்.

ராஜித சேனரத்ன 2014 இல் எடுத்த அரசியல் முடிவின் விளைவாக உயர் பதவிகளுக்குச் சென்ற சிலர் தற்போதைய அரசாங்கத்தின் கூட்டாளிகளாக மாறியிருப்பது எங்களுக்கு வருத்தமளிக்கிறது” என கூறினார்.

இதேவேளை எதிர்காலத்தில் கைது செய்யப்படவிருக்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயரும் பட்டியல் இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் நாங்கள் சிறைகளுக்குப் பழகிவிட்டதால் எதற்கும் பயப்படப் போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் ராஜித சேனாரத்னவின் கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோரும் ஜனநாயக வழிமுறைகள் மூலம் இந்த பழிவாங்கலுக்கு எதிராக நாங்கள் போராடுவோம் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.