இங்கிலாந்தில் இருந்து வேல்ஸிற்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்- வேல்ஸ் அரசாங்கம்

இங்கிலாந்தில் இருந்து வேல்ஸிற்கு இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிற இடங்களுக்குச் செல்லுதல் மற்றும் வீடுகளுக்கு வெளியே ஒருவரை சந்தித்தல் போன்றவற்றுக்கு இங்கிலாந்தில் மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் வேல்ஸ் அரசாங்கம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

வேல்ஷ் அரசாங்க செய்தியாளர் மாநாடு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றபோது, இதுகுறித்து முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் தெரிவிக்கையில்,

“வேல்ஸிக்கு வெளியில் இருந்து மக்கள் எல்லைக்குள் வருவதற்கு இப்போது சரியான தருணம் இல்லை. இங்கிலாந்தில் இருந்து நீண்டதூரம் பயணிப்பவர்கள் குறித்து வேல்ஸில் பலர் அக்கறை கொண்டுள்ளனர். குறிப்பாக கடந்த வார இறுதியில் இங்கிலாந்து அரசாங்கத்தின் அறிவிப்பின் பின்னர் அவர்களின் கவலையை நான் புரிந்துகொள்கிறேன்.

வேல்ஸில் எங்கள் விதிகள் தெளிவாக உள்ளன. பயணம் உள்ளூரில் மட்டுமே இருக்க வேண்டும். அதுவும் அவசியமாக இருக்க வேண்டும். வேல்ஸில் உள்ள அழகு நிலையங்கள் அல்லது வீடுகளுக்கு வெளியேயான சந்திப்புக்கள், நீண்டதூர பயணங்கள் தற்போதைக்கு தேவையில்லை. எனவே இந்த விடயங்களைச் செய்யாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.

மேலும், “வேல்ஸ் அதன் புதிய போக்குவரத்துக்கான ‘கருப்பு’ மண்டலத்தில் இன்னும் உள்ளது. அதாவது மக்கள் முடிந்தவரை வீட்டிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும்.

இதேவேளை, கட்டுப்பாடுகளை எளிதாக்குவதற்கான இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் அணுகுமுறைகளுக்கு இடையிலான வேறுபாடுகள் ஆரம்பத்திலிருந்தே தெளிவாக இருந்தன. ஆனால் இங்கிலாந்து அரசாங்கத்தின் வழிமுறைகள் பொறுப்பற்றவை என்று நான் நினைக்கவில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.