முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வு பூர்வமாக அஞ்சலி செய்வோம் – சர்வதேச இந்து இளைஞர் பேரவை

முள்ளிவாய்க்காலில் இழந்த உறவுகளுக்காக உணர்வுபூர்வமாக அஞ்சலி செய்ய வேண்டியது ஒவ்வொரு எஞ்சிய தமிழனின் கடமையுமாகும் என சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தமிழ் இனப்படுகொலை நடந்து பதினொரு ஆண்டுகள் கடந்துவிட்டது. வரலாற்றிலும் வாழ்விலும் ஒவ்வொரு தமிழனும் இறப்பதனை இந்த உலகம் வேடிக்கை பார்த்தது என்ற உண்மை உலகம் இயங்கும் வரை அவை மறக்க முடியாத வடுக்களாகும்.

ஆண்ட ஓர் இனம் அனாதையாக்கப்பட்டு கேட்பாரன்றி கிடந்த எம்மினத்தின் வலிகளும் இழப்புக்களும் எமக்குத்தான் தெரியும். உலகின் ஒவ்வொருவரின் முகமும் எமக்கு உணர்த்தப்பட்ட நாட்கள்.

ஒன்றரைலட்சம் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டார்கள். எத்தனையோ படுகொலைகள் அரங்கேறியது. யாரும் நீதி தரவில்லை. எம்மால் எது முடியுமோ அவற்றை நாம் செய்யப்பழகிக் கொள்ள வேண்டும். இத்தனை காலமும் இல்லாது இவ்வருடம் பலகெடுபிடிகள் இடம்பெற்று கொண்டிருக்கிறது.

எனவே எமது அன்பான உறவுகளே நாம் செய்ய வேண்டியது எம்மை எல்லாம் விட்டுப் பிரிந்த உறவுகளை ஒரு நிமிடம் உணர்வுடன் விளக்கேற்றி அவர்களை நினைத்து அவர்களின் ஆன்மா ஆன்ம ஈடேற்றம் பெற வேண்டி ஆத்மார்த்தமான பிரார்த்தனைகள் செய்து கொள்ளுங்கள் என அனைத்து தமிழ் உறவுகளையும் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.” என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.