மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு தடை!

மட்டக்களப்பில் இன்று(திங்கட்கிழமை) காலை நடைபெறவிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, கல்லடி, புதுமுகத்துவாரம் பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இன்று காலை 7.30 மணியளவில் குறித்த நிகழ்வு நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பகுதியில் பெருமளவான இராணுவத்தினரும் பொலிஸாரும், புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு குறித்த நிகழ்வு நடைபெறுவது தடுக்கப்பட்டது.

இதன்போது நிகழ்வுக்கு வருகை தந்தவர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவர்கள் தொடர்பான விபரங்களும் பதிவுசெய்யப்பட்டன.

தற்போதைய சூழ்நிலையில் பொது இடங்களில் மக்கள் கூடி நிகழ்வினை நடாத்துவதற்கு அனுமதி வழங்குவதில்லையென்ற அரசாங்கத்தின் அறிவிப்புக்கு அமைவாகவே இந்த நிகழ்வினை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது நினைவு தினப்பகுதியில் பெருமளவான இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டதனால் அப்பகுதியில் அச்ச நிலைமை ஏற்பட்டது.

அத்துடன் இந்த நிகழ்வில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களும் பொலிஸாரினால் அச்சுறுத்தல்களுக்கு உள்ளானதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேநேரம் கொரோனாவினை காரணம் காட்டி இவ்வாறான நிகழ்வுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

சர்வதேச சமூகம் இலங்கையில் சிறுபான்மை சமூகத்தின் நிலைமைகள் தொடர்பில் உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

உயிர் நீர்த்த உறவுகளை நினைவு கூறுவதற்கே தடையேற்படுத்தும் இந்த அரசாங்கம் எவ்வாறு தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்கப்போகின்றது எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.