அட்டன், செனன் தோட்டப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் 6 குடும்பங்களை சேர்ந்த 21 பேர் இடம்பெயர்வு…
(க.கிஷாந்தன்)
மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அடை மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் தோட்டப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் 6 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இவர்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செனன் தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை அம்பகமுவ பிரதேச செயலகத்தின் ஊடாக தோட்ட கிராம சேவகர் வழங்கி வருகிறார்.
மேற்படி தோட்டத்தில் ஒரு வீடு மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் மண்சரிவு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலேயே அபாய வலயத்தில் இருந்த 6 குடும்பங்களும் வெளியேற்றப்பட்டுள்ளன.
மலைநாட்டில் இன்று காலைவேளையில் கன மழை பெய்யாத போதிலும், அடுத்துவரும் நாட்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளதால் தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை