மீன்பிடித் துறைமுகங்களில் 24 மணி நேர தகவல் பரிமாற்றச் சேவையை அமுல்படுத்துமாறு பணிப்புரை

இலங்கையில் தற்போது செயற்பட்டு வருகின்ற 22 மீன்பிடித் துறைமுகங்களிலும் 24 மணி நேர தகவல் பரிமாற்றச் சேவையை அமுல்படுத்துமாறு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடலில் தொழிலுக்குச் செல்லும் கடற்றொழிலாளர்கள் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் வகையில் மீன்பிடித் துறைமுகங்களில் தகவல் பரிமாற்ற நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையங்களில் ஒரு சில நிலையங்களில் 24 மணிநேர சேவையை வழங்குகின்ற போதிலும், மேலும் சில நிலையங்களில் நாளாந்தம் 24 மணிநேரமும் தொடர்ந்து சேவையாற்றக்கூடிய நிலையில் இருக்கவில்லை.

இந்த நிலையில், அனைத்து தகவல் பரிமாற்ற நிலையங்களும் தினமும் 24 மணிநேரமும் சேவையினை வழங்க வேண்டுமெனவும், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

இதேவேளை புத்தளம், தொடுவாவ பகுதியில் கடல் கொந்தளிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள கடலரிப்பினை உடன் தடுப்பதற்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடன் நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைய, அப்பகுதி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கருங்கற்களைப் பயன்படுத்தி, கடலரிப்பைத் தடுக்கும் வகையில் அணை கட்டும் பணிகளும்  ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.