கோட்டாபயவின் இனவாதப் பேச்சு நாட்டுக்கே பேராபத்தாக அமையும்! அரசை எச்சரிக்கிறார் சேனாதிராசா

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக, சிங்கள, பௌத்த இனவாதத்தின் உச்சத்தில் நின்று ஆற்றியிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உரையால், நாட்டுக்கே மிகப் பெரிய பாதிப்பு ஏற்படப் போகின்றது.

இந்த உரையால் தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்துவோம்.” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.

மேலும் தெரிவித்ததாவது…

ஜனாதிபதித் தேர்தல் பரப்புரையின்போது கோட்டாபய ராஜபக்ச தனிச் சிங்கள வாக்குகளைக் குறிவைத்து செயற்பட்டார். பௌத்த – சிங்கள இனவாதத்தைக் கக்கினார். பௌத்த – சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த நாட்டில் இனப்பிரச்சினை இருக்கின்றது. அதற்குத் தீர்வு காணவேண்டும் என்ற எந்த எண்ணமும் அவருக்கு இல்லை.

அப்படிப்பட்டவர்தான் நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு அடுத்த தீவிரவாத, பேரினவாதத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

இறுதிப் போரில் இடம்பெற்ற விடயங்களுக்கான பொறுப்புக் கூறலை கனேடியப் பிரதமர் முதல் கொண்டு ஐ.நா. மனித உரிமைகள் சபையின் முன்னாள் ஆணையாளர்கள் வரையில் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தச் சூழலில் அவற்றை உதாசீனம் செய்து, உதறித்தள்ளி ஜனாதிபதி கோட்டாபய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச அமைப்புக்களிலிருந்து நிறுவனங்களிலிருந்து வெளியேறுவோம் என்று அவர் விடுத்துள்ள எச்சரிக்கை இலங்கைக்குத்தான் ஆபத்தானது.

கொரோனா நிலைமையில் இலங்கைக்குக் கிடைக்கும் உதவிகளையும் அது பாதிக்கும். பொருளாதார ரீதியில் நாடு ஏற்கனவே பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது.

இப்படியான சூழலில் இலங்கை சர்வதேச அமைப்புக்களிலிருந்து வெளியேறுவது இலங்கைக்குத்தான் ஆபத்தானது. இலங்கையின் இந்த அறிவிப்பை தமிழர்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பை இலங்கை அரசு உதாசீனம் செய்யும்போது, சர்வதேச சமூகத்தை தமிழர்கள் பற்றிப் பிடிக்க வேண்டும்.

எமது மண்ணில் நாங்களே ஆளும் நிலைமையை உருவாக்குவதற்கு, சர்வதேசத்தின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு இது பொருத்தமான தருணம்.

எமது நியாயப்பாடுகளை சர்வதேசம் மீண்டும் ஒருமுறை உணர்ந்து கொள்வதற்கும் இது வாய்ப்பாக அமையும்” என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.