சுமந்திரனின் சர்ச்சைக்குரியதான பேட்டிக்கு நீதிபதியாகிய மக்கள் தீர்ப்பு எழுதுவார்கள்! நாசூக்காகப் பதிலளிக்கிறார் சி.வி.கே.சிவஞானம்
கூட்டமைப்பு பிரபாகரனால் உருவாக்கப்பட்ட கட்சி. வளர்க்கப்பட்ட கட்சி. இன்றைக்கும் தந்தை செல்வநாயகத்தால் ஆரம்பிக்கப்பட்ட அகிம்சை பேராட்டம் பிரபாகரனின் ஆயுதப் போராட்டம் என இராஐதந்திர வடிவங்கள் மாறினாலும் இலக்கு ஒன்றாகவே இருக்கும். சுமந்திரனின் கருத்து என்பது பாரிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது உண்மை தான். அது மறுக்கக் கூடியது அல்ல. அதற்கு மேல் நாங்கள் விவாதிக்கத் தேவையில்லை. மக்கள் தான் நீதிபதி. அவர்களே தீர்ப்பை கொடுப்பார்கள். தற்போது தேர்தல் வருகிறது தானே. ஆகையினால் எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து தேர்தலிலே மக்கள் தீர்ப்பு எழுதுவார்கள்.
– இவ்வாறு ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார் சி.வி.கே.சிவஞானம்.
அவரது செவ்வியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-
கேள்வி- பிரதமர் மகிந்த அழைப்பு விடுத்த கூட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொண்டிருந்ததற்கான காரணம் என்ன?
பதில்- – அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டமொன்றுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தார். அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்ட பின்னர் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவுடன் நான் தொடர்பு கொண்டு இந்த அழைப்பு குறித்து பேசியிருந்தேன்.
அதாவது நாங்கள் எதிர்க் கட்சியாக இருந்தாலும் அதிலும் அரசாங்கத்தை நாங்கள் எதிர்த்து வந்தாலும் கூட அவர்கள் தான் தற்போது ஆட்சியில் இருக்கின்றார்கள் என்ற அடிப்படையிலும் வேறு சில பல காரணங்களின் நிமித்தமும் நாம் கலந்து கொள்ள வேண்டுமென்ற காரணங்களையும் கட்சித் தலைவரிடம் விளக்கியிருந்தேன்.
குறிப்பாக 3 காரணங்களைச் சொல்லாம் என்று நினைக்கிறேன். அதாவது பொதுவாகவே கூட்டமைப்பு என்பது ஐக்கிய தேசியக் கட்சிக்கே ஆதரவு வழங்கும் என்ற கருத்து உள்ளது. ஆகையினால் அதிலிருந்து விடுபட வேண்டிய தேவை இருக்கின்றது. அடுத்ததாக எங்களது கோரிக்கைகள் நிலைப்பாடுகள் சம்பந்தமான விடயங்களை இந்த அரசிற்கும் பதிவு செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது.
இறுதியாக நாங்கள் எந்தக் கட்சியுடனும் இல்லை. நாங்கள் நடுநிலையாகச் சிந்திக்கக் கூடியவர்கள். நாங்கள் எமது மக்களின் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பிலே அக்கறை கொண்டு செயற்படும் தரப்பு என்ற அடிப்படையில் யாரையும் சந்திக்க வேண்டியவர்கள்.
இத்தகைய காரணங்களுக்காகவே நாங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய அவசியத்தை நான் வலியுறுத்தியிருந்தேன். அவ்வாறான எண்ணங்கள், சிந்தனைகள் என்னைப் போல் ஏனைய உறுப்பினர்களிடத்தேயும் ஏற்பட்டிருந்ததால் அனைவருமாக சிந்தித்து கலந்துரையாடி சந்திப்பதெனத் தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கின்றோம். ஆகவே இதனை நல்லதொரு முன்னேற்றமாகவே நான் பார்க்கிறேன்.
கேள்வி- பிரதமருடனான சந்திப்பின் போது கூட்டமைப்பு வலியுறுத்திய கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமெனக் கருதுகின்றீர்களா?
பதில்- – இந்தச் சந்திப்பினூடாக பெரிய நம்பிக்கை ஏற்பட வேண்டுமென்றில்லை. ஏனெனில் அவர்கள் எல்லாவற்றையும் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்களது கடந்த கால செயற்பாடுகளை எடுத்துப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. இருந்தும் எமது மக்களின் பல பிரச்சினைகள், தேவைகள் குறித்து சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக அவர்களாகவே சந்திப்புக்கு அழைப்பு விடுக்கும் போது அதனை நாங்கள் நிராகரித்ததாகச் சொல்ல முடியாத அளவில் எங்களது செயற்பாடுகள் அமைய வேண்டியது அவசியமாக இருந்தது. அத்தகைய கருத்துக்கள் வெளிவருவதைத் தவிர்க்கும் வகையிலேயே சந்திப்பு அமைந்திருக்கிறது.
நாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ செயற்படுத்தப்படுமென நினைக்கவில்லை. நாங்கள் சந்தித்தன் பின்னர் அவர்களிடத்தே ஒருவேளை மனமாற்றம் ஏற்பட்டால் அதனைச் செய்வார்கள். அவ்வாறான மனமாற்றம் வந்தால் அதனை வரவேற்கலாம்.
உண்மையாக நாங்கள் எங்கள் நல்லெண்ணத்தைக் காட்டியதால் அவர்களும் நல்லெண்ணத்தைக் காட்டுவார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
குறிப்பாக அரசியல் கைதிகள் விடயத்தில் இந்த நல்லெண்ணத்தை சிலவேளை காட்டலாம். அவர்கள் மனம் வைத்தால் அதனைச் செய்யலாம் என்றே நினைக்கிறேன்.
கேள்வி- பிரதமருடனான சந்திப்பின் பின்னர் கூட்டமைப்பின் மீது ஏனைய தமிழ் கட்சிகள் பலவும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்- – அரசாங்கம் என்ற அடிப்படையில் நாங்கள் எதிர்த் தரப்பாக இருந்தாலும் அவர்களுடன் பேசத்தான் வேண்டும். அந்த அடிப்படையில் பேசுகின்ற போது சாத்தியம் என்பதை மட்டும் வைத்துத்தான் பேச்சுவார்த்தையோ அல்லது கலந்துரையாடலோ நடத்தப்படுவதில்லை. அந்த எதிர்பார்ப்போடு நாங்கள் போகவில்லை. எங்களது பிரச்சினைகள் தேவைகளை வலியுறுத்துகின்ற அடிப்படையில் தான் கலந்து கொண்டிருந்தோம்.
பிரதமருடனான சந்திப்பு குறித்து கூட்டமைப்பின் மீது குற்றஞ்சாட்டுவது மிக மிக தவறானது. பல கட்சிகளும் அந்த சந்திப்பை தவிர்த்த போதும் கூட்டமைப்பாக நாங்கள் தனித்துவமாக முடிவெடுத்துச் செயற்பட்டோம்.
அதனை தவறென குற்றஞ்சாட்டுவது பொருத்தமற்றது. அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் தான் இத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். அதிலும் இப்படியான சந்திப்புக்கள் பேச்சுக்கள் மூலமாக கூட்டமைப்பு முன்வைக்கின்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் அது கூட்டமைப்பிற்குச் சாதகமாக வந்து விடுமென்ற எரிச்சலும் அச்சமும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆகவே அவர்களது குற்றச்சாட்டுக்கள் தவறானவை என்பது மட்டுமல்ல அரசியல் காழ்ப்புணர்ச்சியுடையவையாகவே இருக்கின்றது.
கேள்வி- இன்றைய நிலைமையில் சுமந்திரனின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது?
பதில்- – சிங்களப் பேட்டியை முழுமையாக நான் பார்த்தேன். ஓரளவிற்கு சிங்கள மொழி அறிவு உள்ளவன் என்ற அளவில் சில விடயங்களை சரியாகவே கையாண்டுள்ளார் என்றே கருதுகின்றேன். ஏனெனில் அந்தப் பேட்டியில் கேள்வியை கேட்பவரின் அணுகுமுறை குறுக்கு விசாரணைத் தொனியில் தான் இருந்தது.
நானாக இருந்தால் அதே பாணியில்தான் பதிலளித்திருப்பேன். ஆனால் சுமந்திரனின் விட்ட தவறு என்னவெனில் கேள்விக்கு முழுமையாக பதிலளித்திருந்தால் சர்ச்சைக்குள் மாட்டியிருக்க மாட்டார். அந்தப் பேட்டியில் அரசியல் போராட்டம் ஆயுதப் போராட்டத்துடன் உடன்படுகிறீர்களா என்று கேட்கப்படுகிறது. அதற்கு தான் உடன்படவில்லை என்று சுமந்திரன் கூறியுள்ளார்.
அதில் இரண்டையும் சுமந்திரன் மறுதலித்தது தான் தவறானது. அதன் பின்னர் ஆயுதப் பேராட்டத்துடன் உடன்படவில்லை. தான் அகிம்சையில் நாட்டம் கொண்டவன் என விளங்கப்படுத்த போய்த் தான் சர்ச்சைக்குள் சிக்கியுள்ளார். ஆயுதப் போராட்டம் அரசியல் என இரண்டையும் பேசியிருந்தால் சிக்கல் வந்திருக்காது.
என்னைப் பொறுத்தவரையில் நான் புலிகளோடு இணைந்து செயற்பட்டவன் அவர்களை ஆதரித்தவன். புலிகள் அரசியல் போராட்டத்தையும் ஆயுதப் போராட்டத்தையும் சமாந்தரமாக முன்னெடுத்தனர். ஆகவே இந்த விடயங்களை நாங்கள் தெளிவாக சொல்ல முடியும்.
கேள்வி- சுமந்திரனின் இந்த சர்ச்சை கருத்துக்களுக்கு கூட்டமைப்பிற்குள் இருந்தே எதிர்ப்புகள் வருகின்ற அதேவேளையில் அவரை பேச்சாளர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டுமென்று கோரப்படுகின்றதை கட்சியின் முக்கியஸ்தரான நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?
பதில்- – பேட்டியில் சில விடயங்களுக்கு சுமந்திரன் பதில் சொல்லப் போக பலவிதமான விமர்சனம் வந்தது உண்மை தான். அத்தகைய பதில்களை அவர் தவிர்த்திருக்கலாம் என்பது எனது முதலாவது கருத்து. இரண்டாவதாக வன்முறைக்கு எதிரானவர் என்ற கருத்தை உள்ளடக்காமல் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லியிருக்கலாம். அதை வைத்துக் கொண்டு அவரை கட்சிக்குள்ளும் வெளியிலும் தற்போது குற்றஞ்சாட்டுகின்றனர்.
அதற்காக அவரை நீக்க வேண்டுமென்ற கருத்தோடு நான் உடன்படவில்லை. அப்படியான செயற்பாடுகள் முன்பும் கூட்டமைப்பிற்குள் நடக்கவில்லை. சுமந்திரன் தனியாக இந்த விடயங்களில் ஒரு முடிவை எடுக்கலாம். கட்சியாக நீக்குவது பொருத்தமானதாகப் படவில்லை.
ஆனால் கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்து கொண்டு ஆயுத அரசியல் போராட்டத்தோடு உடன்படவில்லை என்று சொன்னது தவறானது. அவ்வாறான கருத்தை அவர் தெரிவிக்காமல் இருந்திருக்கலாம் என்பது தான் என்னுடைய கருத்து
கேள்வி- சுமந்திரனின் கருத்து கூட்டமைப்பின் நிலைப்பாடு என்றும் கூட்டமைப்பு தவறான பாதையில் பயணிப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?
பதில்- சுமந்திரனின் நிலைப்பாடு இந்தவிடயத்தில் கூட்டமைப்பின் நிலைப்பாடு அல்ல. பேட்டி எடுத்தவர் இனவாதிபோன்று குறுக்கு விசாரணை போன்றே அவர் செயற்பட்டிருக்கின்றார். ஆனாலும் அந்தப் பேட்டியில் சுமந்திரன் கூறியவை அவரது தனிப்பட்ட கருத்து தான். அவர் பேச்சாளராக இருந்த கொண்டு அப்படி சொல்லக் கூடாது. ஆனால் அவரின் கருத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு கூட்டமைப்பை குற்றம் சொல்ல முடியாது.
கூட்டமைப்பு பிரபாகரனால் உருவாக்கப்பட்ட கட்சி. வளர்க்கப்பட்ட கட்சி. இன்றைக்கும் தந்தை செல்வநாயகத்தால் ஆரம்பிக்கப்பட்ட அகிம்சை பேராட்டம் பிரபாகரனின் ஆயுதப் போராட்டம் என இராஐதந்திர வடிவங்கள் மாறினாலும் இலக்கு ஒன்றாகவே இருக்கும். எனவே கூட்டமைப்பை யாரும் தவறாக சித்தரிக்க முடியாது. சித்தரித்தால் அது தவறானது.
கேள்வி- சுமந்திரன் மீதான விமர்சனங்களுக்கு கூட்டமைப்பின் உட்பூசல் தான் காரணமா?
பதில்- – சுமந்திரனின் கருத்து என்பது பாரிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது உண்மை தான். அது மறுக்கக் கூடியது அல்ல. அதற்கு மேல் நாங்கள் விவாதிக்கத் தேவையில்லை. மக்கள் தான் நீதிபதி. அவர்களே தீர்ப்பை கொடுப்பார்கள். தற்போது தேர்தல் வருகிறது தானே. ஆகையினால் எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து தேர்தலிலே மக்கள் தீர்ப்பு எழுதுவார்கள்.
மேலும் கூட்டமைப்புக்குள் உட்பூசல் இல்லை. ஆனால் அந்தக் கருத்துடன் உடன்பட முடியாதவர்கள் அதனை எதிர்க்கின்றனர். ஜனநாயகக் கட்சி என்ற அடிப்படையில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவை பெரிய அளவில் தாக்கம் செலுத்தாது. இப்போது இந்த விடயத்திலும் கருத்துப் பரிமாற்றம் ஏற்பட்டுள்ளது உண்மைதான். அது பொது வெளியில் பேசப்பட்டதும் உண்மை தான். தொடர்ந்து கட்சிக்குள்ளேயும் பேசப்படும். அவ்வாறு விவாதிக்கப்பட்டு இணக்கப்பாடு ஏற்படுமென்று நான் நம்புகின்றேன்.
கேள்வி- இத்தகைய நிலைமைகளின் பின்னராக கட்சிக்குள் மாற்றங்கள் ஏற்படுத்த சாத்தியம் உள்ளதா?
பதில்- – தமிழரசுக் கட்சியிலோ கூட்டமைப்பிலோ மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை. சில சில பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது அது குறித்து பேசப்படும். அதன் பின்னர் ஒரு முடிவெடுத்து ஒருமித்துச் செயற்படுகின்ற நிலைமை தான் கட்சிக்குள் இருக்கிறது.
தற்போது பேச்சாளராக உள்ள சுமந்தரனை அதில் நீக்க வேண்டுமென்று சொல்லப்படுகிறது. ஆனால் அது குறித்து எல்லாம் கட்சி தான் முடிவெடுக்க முடியும்.
என்னைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற ஒட்டுமொத்த நிலையை மாற்றி பாராளுமன்றக் குழுவின் பேச்சாளர் என்ற ஒருவரையும் தமிழரசுக் கட்சிக்கு ஒரு பேச்சாளரையும் வைத்திருக்க வேண்டும் என்பது தான் ஆரோக்கியமாக இருக்கும். அதுதான் இனிமேல் இப்படியான இடர்ப்பாடுகளை தவிர்ப்பதற்கான வழிவகைகளாக இருக்குமென்று நான் பார்க்கிறேன்.
கேள்வி- அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் குறித்தான உங்களது நிலைப்பாடு என்னவாக உள்ளது?
பதில்- – தேர்தல் இப்பொழுது நடைபெற சாத்தியம் இல்லை. ஏனெனில் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளால் அது அனேகமாக பிற்போடப்படும் சாத்தியமே உள்ளது. பெரியளவில் பிரசாரம் செய்ய வாய்ப்பு இருக்காது.
என்னைப் பொறுத்தவரையில் சுமந்திரனின் பிரச்சினையால் கூட்டமைப்பு பாதிக்கப்படும் என்றும் அதனை வைத்த பிரசாரம் செய்யலாமென்றும் சிலர் கருதுகின்றனர். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அது பேசு பொருளாக அமைந்தாலும் இதனை மக்கள் தெளிவாக புரிந்துகொள்வார்கள் என்றே கருதுகின்றேன். கூட்டமைப்பின் பணி தொடரும் மக்கள் அதனை ஏற்றுக் கொண்டு எங்களை ஆதரிப்பார்கள் என நம்புகிறேன். – என்று தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை