அரசின் கொள்கைத்திட்டம்தான் கோட்டாவின் போர் வெற்றி உரை – அமைச்சர் பந்துல பகிரங்கமாகத் தெரிவிப்பு
“நாட்டின் தேவைக்காக பாதுகாப்புப் படைகளை சகல துறைகளிலும் இணைத்துக்கொள்வதே ஜனாதிபதியினதும் அரசினதும் உறுதியான நிலைப்பாடாகும். எமது கொள்கைத்திட்டம் என்ன என்பதை ஜனாதிபதி போர் வெற்றி விழாவில் நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் தெளிவாகத் தெரிவித்துவிட்டார்.”
– இவ்வாறு அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ஜனாதிபதியின் தீர்மானங்களில் தலையிடும் அதிகாரம் எவருக்கும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியார் சந்திப்பு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதியின் போர் வெற்றி விழா உரை மற்றும் இராணுவ மயமாக்கல் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதன்போதே பந்துல குணவர்தன மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாடு இராணுவ மயமாக்கப்படவில்லை. இராணுவ அதிகாரிகள் நியமனம் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்துடன் தொடர்புபட்டதாகும். அதில் எவரும் தலையிட முடியாது. ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைய ஜனாதிபதி செயலாளர் தீர்மானம் எடுத்துள்ளார்.
இந்த நாட்டைப் பிளவுபடுத்தவிடாது, தமிழ்,சிங்கள, முஸ்லிம் மற்றும் ஏனைய மக்களை ஒன்றிணைக்கும் வகையில் இராணுவம் மனிதாபிமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.
தேர்தல் ஒன்று விரைவில் நடத்தப்பட்டால் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும். வேலைவாய்ப்புகள், கடன் திட்டங்கள் மற்றும் ஜனநாயக செயற்பாடுகள் முழுமையாக முன்னெடுக்கப்படும். அரசமைப்பு, நிறைவேற்று அதிகாரம் முழுமையாகச் செயற்படும் என்றால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க அனைவரிதும் ஒத்துழைப்பு வேண்டும்.
அதேபோல் நிதி கையாளுகை விடயத்திலும் பிரச்சினைகள் எதுவும் இல்லை. நாடாளுமன்றம் இல்லாத நேரத்தில் ஜனாதிபதி அதனைக் கையாள முடியும். இது சட்டவிரோத செயற்பாடு அல்ல” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை