சுமந்திரனுக்கு நன்றி பாராட்டிய நிந்தவூர் பிரதேசசபை
கொரோனா வைரஸ் தாக்கத்தால் மரணமடைந்தோரின் ஜனாஸா எரிப்பு சம்பந்தமான வழக்கில் இலவசமாக வழக்காட தீர்மானித்த ஜனாதிபதி சட்டத்தரணி மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது
நிந்தவூர் பிரதேச சபையின் 26 வது மாதாந்த கூட்ட அமர்வு வியாழக்கிழமை (21) பிரதேச சபையின் பதில் தவிசாளர் வை.எல்.சுலைமாலெவ்வை தலைமையில் முற்பகல் இடம்பெற்றது.இந்த அமர்விலேயே சுமந்திரனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதன் போது சபை ஆரம்பமான நிலையில் முதலில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மரணமடைந்தோருக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து அரசாங்கம் இந்த நாட்டில் பல நன்மையான விடயங்களை செய்து வந்தாலும் பல கசப்பான விடயங்களும் இடம்பெற்று வருகின்றன. கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாசாக்கள் எரிக்கின்ற விடையத்தை பதில் தவிசாளர் என்ற வகையில் வன்மையாக கண்டிக்கின்றேன் என பதில் தவிசாளர் வை.எல்.சுலைமாலெவ்வை தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எப்.றிஹானா கொரோனா அனர்த்த காலத்தில் இறந்தவர்களின் ஜனாசா எரிப்பு குறித்து பிரேரணையை கொண்டு வந்து உரையாற்றினார் . உலக சுகாதார நிறுவனம் கொரோனா தாக்கத்தினால் மரணமடைந்துள்ளவர்களை எரிக்கவேண்டிய அவசியம் இல்லை புதைக்க முடியும் என அறிவுறுத்தல் விடுத்த பின்னரும் இலங்கையில் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பது மத நம்பிக்கைக்கு முரணானது.
கொரோனா தாக்கத்தால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பது குறித்து வெளியான வர்த்தமானி அறிக்கையினை மீளப்பெற வேண்டும். அத்தோடு அடக்கம் செய்வதற்கான அறிக்கையினை வெளியிட வேண்டும் என சபையின் ஏகமனதான தீர்மானத்தை சனாதிபதிக்கு அனுப்பிவைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு ஜனாஸா எரிப்பு சம்பந்தமான வழக்கில் இலவசமாக வழக்காட தீர்மானித்த ஜனாதிபதி சட்டத்தரணி மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனுக்கு சபையில் நன்றி தெரிவிக்கப்பட்டது. அதனை சபையினர் ஏற்றுக்கொண்டனர்.
தற்போது நாட்டில் கொரோனா அனர்த்தம் ஏற்பட்டுள்ள வேளையில் இயற்கை சீற்றம் அம்பாறை மாவட்டத்தில் கரையோர பிரதேசத்தில் கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்களின் படகுகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை புரிய மக்கள் பிரதிநிதிகள் இக்கட்டான காலநிலையில் மக்களுடன் துணை நிற்க வேண்டும் என குறிப்பிட்டார்.
மேலும் பிரதேச சபையின் அனுமதி இன்றி நிந்தவூர் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள அனல் மின் உற்பத்தி நிலையத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதோடு பல்வேறு சுவாச,தோல் நோய் தாக்கத்திற்கு பிரதேச மக்கள் ஆளாவதால் குறித்த அனல் மின் உற்பத்தி நிலையத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து தகுதிவாய்ந்த ஆய்வாளர்களை கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும் என பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம்.ஜாரிஸ் கொண்டுவந்த பிரேரணையை சபை உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மேலும் குறித்த அனல் மின் உற்பத்தி நிலையத்தால் நாளொன்றுக்கு ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம் லீற்றர் நிலத்தடி நீர் அகத்துறிஞ்சப்படுவதால் எதிர்காலத்தில் குறித்த பகுதியில் நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக சபையில் குறித்த உறுப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
கருத்துக்களேதுமில்லை