ஓமந்தையில் புதையல் தேடிய படையினருக்கு கிடைத்த பொருள்

ஓமந்தை – கோவில்குஞ்சுக்குளம் பகுதியிலுள்ள காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பாரியளவிலான தேடுதல்  நடத்தப்பட்டது. எனினும் புதையல் எவையும் மீட்கப்படவில்லை.

குறித்த காணியில் சில மாதங்களுக்கு முன்னர் இனந்தெரியாத நபர்களால் குழியொன்று தோண்டப்பட்டுள்ளது. அதன் பின்னர் காணியின் உரிமையாளரின் உறவினருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய நபரொருவர் அக்காணியில் மர்மபொருள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதன் நிமித்தம் காணி உரிமையாளரால் இவ்விடயம் தொடர்பாக ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், நீதிமன்ற அனுமதியுடன் இன்று (சனிக்கிழமை) காலை காணியில் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் குழி தோண்டும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது 16அடி ஆழம் வரை குறித்த பகுதி தோண்டப்பட்டிருந்த போதும் குங்குமம் வைக்கப்பட்ட சிறிய குடத்துடன் தகடு ஒன்றை தவிர வேறு எதுவும் கிடைக்காத நிலையில், தோண்டப்பட்ட குழி பின்னர் மூடப்பட்டது.

குறித்த காணியை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் நீதவான், தடயவியல் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், வவுனியா பிரதேச செயலாளர், புலனாய்வாளர்கள், தொல்பொருள் திணைக்களத்தினர், தீயணைப்பு பிரிவினர், வைத்தியர்கள், கிராமசேவையாளர் முன்னிலையில் குறித்த பணி முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.