இணுவையூர் ச.வே.பஞ்சாட்சரம் ஐயாவுக்கு தமிழ் மரபுக் காவலர் விருது வழங்கி கௌரவம்!
இணுவில் மண்பெற்றெடுத்த தமிழுக்குப் பெருமைசேர்த்து தமிழை வாழவைத்துக்கொண்டிருக்கும் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் ஐயாவுக்கு கனடா தமிழ்ர் மரபு மாநாட்டு அமைப்பு ”தமிழ் மரபுக் காவலர்” என்ற விருதை 2 ஆவது தமிழர் மரபு மாநாட்டில் வைத்து வழங்கிக் கௌரவித்துள்ளது.
இணுவை மண் பெற்றெடுத்த பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் தமிழ் கூறும் நல்லுலகிற்கு பல படைப்புக்களைத் தந்துள்ளார். தன் ஆழ்ந்த கவிப் புலமையால் பல கவிதைகளை வெளியிட்டுள்ளார். சிறுகதை எழுத்துலகில் இவருக்கென்று தனியிடம் உண்டு. செந்தமிழும் ரசனைமிகு இலக்கணத் தொடர் அமைப்பும் இவரது எழுத்துருவாக்கத்துக்கு மேலும் அழகு சேர்ப்பன.
ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் இவரது பங்கு – பணி – மகத்தானது. ஈழத் தமிழர் மத்தியில் இவர் எழுதிய விடுதலை வேட்கையும் தளர்விலாத தேசியப் பற்றும் கொண்ட கவிதைகள் ஒவ்வொரு தமிழ்மகனையும் அவனது இனவுணர்வோடு கலந்து மயிர்க்கூச்செறியும் உணர்வை ஏற்படுத்தியது. இதனால் தேசியத் தலைவரிடத்தில் கௌரவமும் பாராட்டும் பெற்ற ஒரு கவிஞர் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம்.
இவ்வாறான தமிழுக்குத் தொண்;டாற்றிய பெரியார் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் ஐயாவுக்கு கனடா தமிழர் மரபு மாநாட்டு அமைப்பு தனது 2 ஆவது தமிழர் மரபு மாநாட்டில் வைத்து தமிழ் மரபுக் காவலர் என்ற விருதை வழங்கியமையால் அந்த அமைப்பு தனது கௌரவத்தை உயர்த்திக்கொண்டதென்பது வெள்ளிடைமலை.
கருத்துக்களேதுமில்லை