முன்னாள் ஜனாதிபதியுடன் உறவாடி விட்டு கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சித்தார்கள் – ரவி கருணாநாயக்க

முன்னாள் ஜனாதிபதியுடன் உறவாடி இருந்துவிட்டு, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்த சிலர் முயற்சித்தார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இதனால் என்ன லாபம் கிடைத்தது? ஐக்கிய தேசியக் கட்சி என்பது பழமைவாய்ந்த ஒரு கட்சியாகும். டி.எஸ்.சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, ஜே.ஆர்.ஜயவர்த்தன போன்றோர் வளர்த்தெடுத்த கட்சியாகும்.

இதனை நாம் பாதுகாக்க வேண்டும். ஆனால், சிலர் கட்சியை பிளவுப்படுத்தவே முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக பொய்யான கருத்துக்களை சமூகத்தில் பரப்புகிறார்கள். கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஏகாதிபத்தியவாதி என குற்றஞ்சாட்டுகிறார்கள்.

ஆனால், அவர் உண்மையாக ஏகாதிபத்தியவாதியாக செயற்பட்டிருந்தால் கட்சிக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. அவர் அனைவருக்கும் சுதந்திரம் அளித்தமையின் விளைவையே இன்று கட்சி அனுபவித்து வருகிறது.

எனினும், கட்சிக்குள் இவ்வாறான பிரச்சினைகள் வருவது இயல்பான ஒன்றாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் இவ்வாறு இடம்பெற்றுள்ளது. இவை அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள்தான் தீர்ப்பை வழங்குவார்கள்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.