அதிகார வேட்கை, அடிப்படைவாத நாட்டம் ஒரு போதும் நாட்டிற்கு நன்மையளிக்காது – ஸ்ரீநேசன்
கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் கண்டறிவதற்கான செயலணியென்பது பேரின அடிப்படைவாத நில அபகரிப்பின் உத்தியா?, தொல்லியல் இடங்களைக்கண்டறியும் நில வேட்டையா? என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்று(செவ்வாய்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் இடங்களைக்கண்டறிவதற்காக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில், செயலணி ஒன்றை அமைக்கப்போவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
சிறுபான்மைத் தமிழ் பேசும் மக்களின் பூர்வீகமான நிலங்களை கையகப்படுத்துகின்ற சூழ்ச்சியோ என்று ஐயுற வேண்டியுள்ளது. அரசகாணி, மகாவலிக்காணி, வனத்திணைக்களக்காணி, வனசீவராசிக்காணி, எல்ஆர்சி காணி, தொல்லியல் காணி என மத்தியரசு பல்வகைக்காணிகளை தன்னகப்படுத்தியுள்ளது.
மாகாணசபைகளுக்குக் காணி அதிகாரங்கள் முறையாகக் கையளிக்கப்படாததால், மாவட்டத் தேவைகளுக்காக மத்தியரசின் அனுமதியைப் பெறுவதில் மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. இப்படியிருக்க,மேன்மேலும் அரசு காணிகையகப்படுத்துவதென்பது தோலிருக்கப் பழத்தினை அபகரிப்பதாக அமைகின்றது.
கொரோனாத் தாக்கத்தினால் உலக இயக்கமே முடங்கி அடங்கிக் கிடக்கின்றது. ஆனால், எமது நாட்டில் ஓசை எழாமல், தேசிய ஒற்றுமைக்கு எதிரான திட்டமிட்ட பேரினவாதக் கருமங்கள் நடைபெறுகின்றன.
மரணதண்டனைக்குரிய கொலையாளிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பால் விடுதலை, தொல்லியல் காணிகள் என்ற பெயரில் காணிகள் பேரின மயமாக்கல், ஒவ்வாத பதவியேற்றங்கள், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் குறிப்பாக்க் கொரோனாத் தொற்றற்ற பிரதேசங்களுக்கு, பிற மாவட்டங்களில் இருந்து கொரோணாத் தொற்றாளர்கள் கொண்டு வருகை, சிவில் சேவை இராணுவ மயமாக்கல் போன்ற வெறுப்பூட்டும் கருமங்கள் நடைபெறுகின்றன.
அதிகார வேட்கை, அடிப்படைவாத நாட்டம் ஒரு போதும் நாட்டிற்கு நன்மையளிக்காது. தேசிய ஐக்கியத்தையும் வளர்க்காது“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை