வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் மீது அரசாங்கம் வரி சுமைகளைத் திணிக்கிறது – வேலுகுமார்
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு சலுகைகளை வழங்கி அவர்கள் மீண்டெழுவதற்கு நேசக்கரம் நீட்டவேண்டிய அரசாங்கம், அவர்கள் மீது வரி சுமைகளைத் திணித்து மனிதநேயமற்ற வகையில் ஆட்சியை முன்னெடுக்கின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள ஊடக அறிக்கையில், ‘கொரோனா வைரஸின் தாண்டவத்தால் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. வர்த்தக துறைகளெல்லாம் வீழ்ச்சி கண்டுள்ளன. நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்கின்றன. சம்பளம்கூட குறைந்தளவிலேயே வழங்கப்படுகின்றது. இதனால் நாட் சம்பளத்தையும் மாதச்சம்பளத்தை நம்பியிருந்தவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, மக்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டிய இக்கால கட்டத்தில் 5 ஆயிரம் ரூபாயிலும் அரசியல் நாடகத்தை அரங்கேற்றிவிட்டு, தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலையையும் அதிகரித்து அப்பாவி மக்களின் வயிற்றில் அடித்துள்ளது.
இதனால் பருப்பு, சீனி, ரின்மீன், மிளகாய் உட்பட பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். அது ஏனைய உணவு பொருட்களின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது மரத்தில் இருந்து கீழே விழுந்தவனை மாடு முட்டுவதுபோல் உள்ளது.
கொரோனா, ஊடரங்கு சட்டம், தொழில் இன்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் தலையிடியை கொடுத்துவிட்டு, தேசிய உற்பத்தியை பாதுகாக்கவே இப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் அம்புலிமாமா கதை சொல்கின்றது.
எமது நாட்டு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். உரத்தட்டுப்பாடு நிலவுகின்றது. உற்பத்திக்கேற்ப விலை இல்லை. எனவே, உரிய திட்டங்கள் எதுவும் இல்லாமல் திடீரென பொருளாதார திட்டங்களை வகுப்பது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.
அதேவேளை, உலக சந்தையில் எரிபொருட்களின் விலை நன்றாகவே குறைந்துள்ளது. அதன் அனுகூலத்தை அரசாங்கம் பாவனையாளர்களுக்கு வழங்கவில்லை. ஏற்கனவே அரச ஊழியர்களின் சம்பளத்தில் கைவைத்துள்ள அரசாங்கம் தற்போது மக்களின் அடிவயிற்றிலும் கைவைத்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை