கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் தரமற்ற கட்டடப்பணிகள் இடம்பெற்று வருவதாக மக்கள் சாடல்
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் தரமற்ற கட்டடப்பணிகள் இடம்பெற்று வருவதாகவும் குறித்த கட்டுமான பணியில் தமக்கு திருப்தி இல்லை என வீட்டுத்திட்ட பயனாளிகள் அதிருப்தி வெளியிடுகின்றனர்.
குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் 668 வீடுகள் கட்டுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
2017ம் ஆண்டு முதல் நவீன தொழில்நுட்ப முறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் வீட்டுத்திட்டங்களில் 167 வீடுகள் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அவற்றிலேயே குறித்த குறைபாடுகள் காணப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் தர்மபுரம் கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டங்களிற்காக பயன்படுத்தப்படும் செங்கற்கள் தரமற்றவையாக காணப்படுவதாகவும் அவை அண்மையில் பெய்த மழைக்கு கரைந்து வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறித்த கற்களைக்கொண்டு அமைக்கப்படும் வீட்டுத்திட்டங்கள் எதிர்காலத்தில் பாதுகாப்பற்றதாக அமைந்துவிடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.
இவ்வாறான நிலையில், குறித்த கட்டுமான பணிகளின் தரத்தினை ஆராய்ந்து, பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கண்டாவளை பிரதேச செயலாளரிடம் மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக கண்டாவளை பிரதேச செயலாளரின் கவனத்திற்கு ஊடகவியலாளர்களினால் வைக்கப்பட்ட கோக்கைக்கு அமைவாக குறித்த வீடுகளை இன்று கண்டாவளை பிரதேச செயலாளர் பார்வையிட்டார்.
குறித்த கட்டடத்தின் தரம் தொடர்பாக நேரடியாக பார்வையிட்ட பிரதேச செயலாளர், குறித்த பணிகளை முன்னெடுக்கும் தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் மக்களின் பொருத்தமான தீர்வொன்றினை பெற்று தருவதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துக்களேதுமில்லை