அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமிழர்களுக்கான தனி நாடு என்ற கருத்துக்கு ஆதரவளிக்க தொண்டமான் மறுத்தார் – ஜனாதிபதி!
அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமிழர்களுக்கான தனி நாடு என்ற கருத்துக்கு ஆதரவளிக்க அவர் உறுதியாக மறுத்துவிட்டார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவினையடுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நலிவுற்ற தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானின் அகால மறைவு பற்றி அறிந்து நான் மிகவும் கவலையடைகிறேன்.
தனக்கு முன்னோடியாக இருந்த தனது பாட்டனாரும் சிரேஷ்ட தலைவருமான சௌமியமூர்த்தி தொண்டமானின் மகத்தான பணியை முன்னெடுத்துச் சென்ற ஆறுமுகம் தொண்டமான், மலையக தமிழ் சமூகத்தின் மனக்குறைகளை தீர்ப்பதற்காக தைரியமாக செயற்பட்டார்.
தமிழ் சமூகம் முகம்கொடுத்த பிரச்சினைகளை சரியாக அறிந்திருந்த தொண்டமான், அதற்காக தனது அரசியல் வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தார். அக்காலகட்டத்தில் செயற்பட்டுவந்த சக்திவாய்ந்த பயங்கரவாத அமைப்பினால் விடுக்கப்பட்ட அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமிழர்களுக்கான தனி நாடு என்ற கருத்துக்கு ஆதரவளிக்க அவர் உறுதியாக மறுத்துவிட்டார்.
நலிவடைந்த தொழிலாளர்களாக கருதப்பட்ட பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான தனது பாட்டனாரின் முயற்சியை அவர் தொடர்ந்தும் முன்னெடுத்தார். சௌமியமூர்த்தி தொண்டமானினால் ஆரம்பிக்கப்பட்டு, ஆறுமுகம் தொண்டமானினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் காரணமாக இன்று தோட்ட சமூகத்தினர் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அடைந்துள்ளனர்.
அரசியல் கட்சிகளுடன் செயற்படும் போது அவர் மூலோபாய இடைவினையாற்றுதல் பற்றிய ஒரு தீவிர அவதானியாகவும் மாணவராகவும் இருந்தார். அவரது முக்கிய அக்கறை தன்னை அவர்களது மறுக்கப்படமுடியாத தலைவராக ஏற்றிருந்த சமூகத்தின் உரிமைகளை வெல்வதாகும். ஆறுமுகம் தொண்டமானின் செயற்திறமான அரசியல் மற்றும் மதிநுட்பத்தின் இழப்பு சமூகத்திற்கு பெரும் இழப்பாகும்.
மக்கள்நேய அரசியல்வாதியான ஆறுமுகம் தொண்டமானின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் ஆத்மா அமைதியடையட்டும் என பிரார்த்திக்கின்றேன்.
கருத்துக்களேதுமில்லை