ஆறுமுகனின் இழப்பு நிரப்ப முடியாத வெற்றிடம் – சிவசக்தி ஆனந்தன்

மலையக தமிழ் மக்களின் உரிமைக்குரலான ஆறுமுகனின் இழப்பு நிரப்ப முடியாத வெற்றிடம் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு எமக்கு அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

மலையக மக்களின் விடியலான மறைந்த பெருந்தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் காட்டிய வழியில் அரசியல் பிரவேசம் செய்திருந்த ஆறுமுகன் தொண்டமான், தனது மக்களின் குரலாகவும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் நிரந்தரமான சமாதானத்திற்காகவும் நாடாளுமன்றத்தினுள்ளும் சரி வெளியிலும் செயற்பட்டு வந்தார்.

என்னுடன் சக உறுப்பினராக இருந்த அவர், தனது மக்கள் மற்றும் சமுகம் சார்ந்து காட்டிய அக்கறைகளும் அர்ப்பணிப்பு மிக்க தொடர்ச்சியான செயற்பாடுகளும் நாளைய சந்ததியினருக்கு என்றுமே முன்னுதாரணமாக அமைகின்றன.

மலையக மக்களின் உரிமைகளுக்காகவும் வாழ்வியல் ஈடேற்றத்திற்காகவும் என்றுமே குரல்கொடுத்து வந்ததோடு, தனது சமுகத்தின் பாதுகாவலனாகவே என்றும் செயற்பட்டும் வந்திருந்தார்.

அத்தகையதொரு தலைவரின் இழப்பு மலையக தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் என்றுமே நிரப்ப முடியாத வெற்றிடமேயாகும்.

ஆறுமுகனின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், பொதுமக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருடனும் கூட்டிணைந்து நாமும் துயர் பகிர்ந்துகொள்வதோடு அவரது ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனையும் செய்கின்றோம்” என மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.