கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம்
யாழ். தொண்டமனாறு செல்வ சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம கந்தன் ஆலயத்தை நோக்கி பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
செல்வசந்நிதி முருகன் ஆலயத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, ஆலய கப்புறாளையால் யாத்திரைக்கு தலைமை தாங்கி செல்லும் அடியவரின் கையில் முருக பெருமானின் வேல் கையளிக்கப்பட்டது.
வேலினை பெற்றுக்கொண்ட அடியவர்கள் கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரையை ஆரம்பித்தனர். இந்த யாத்திரை குழுவினர் எதிர்வரும் 4ஆம் திகதி விசாகம் அன்று முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் நடைபெறும் விசேட பொங்கல் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து கதிர்காமம் நோக்கி பாத யாத்திரையாக சுமார் 46 நாட்கள் சென்று கதிர்காம கந்தனின் கொடியேற்ற தினத்தன்று ஆலயத்தைச் சென்றடையவுள்ளனர்.
இம்முறை கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக யாத்திரை தடைபடும் என எதிர்ப்பார்த்தபோதிலும் முருக பெருமானின் அருளால் இம்முறை யாத்திரை தடங்கல் இன்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முருக பெருமானின் அருலாசியுடன் கதிர்காம கந்தனை சென்றடைவோம் என யாத்திரையில் பங்கேற்ற அடியவர் ஒருவர் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை