சட்டவிரோத மண் அகழ்வு: இருதரப்பினருக்கு இடையில் மோதல்- பெண் ஒருவர் உட்பட ஆறு பேர் படுகாயம்

மட்டக்களப்பு- வாகனேரி பகுதியில் சட்ட விரோதமாக மண் ஏற்றுவதற்கு சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஓருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வாகனேரி குளம் பகுதியில் ஓட்டமாவடியை சேர்ந்தவர்களினால் தொடர்ச்சியாக சட்ட விரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மண் அகழ்வுகள் குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்களினால் பல்வேறு தடவைகள் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்பட்டு உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அப்பகுதிகளில் தொடர்ச்சியான மண் அகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் நேற்று மாலை அப்பகுதிக்கு மண் அகழ்வுக்கு சென்றவர்கள், அப்பகுதியை சேர்ந்தவர்களினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது மண் அகழ்வுக்கு சென்றவர்களினால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ஓட்டமாவடியை சேர்ந்தவர்கள் மேலும் ஒரு உழவு இயந்திரத்தில் வந்து அப்பகுதி மக்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இதன்போது சம்பவம் நடந்த பகுதிக்கு சென்ற கிராம அபிவிருத்தி சங்க தலைவரும் குறித்த குழுவினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல்கள் காரணமாக பெண் ஒருவர் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், இது தொடர்பில் வாழைச்சேனை –ஏறாவூர் பிராந்தியத்திற்கான உதவி பொலிஸ் அத்தியட்சகரை தொடர்புகொண்டு குறித்த பிரச்சினை தொடர்பில் முறையிட்டதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஏறாவூரில் இருந்து விசேட பொலிஸ் குழுவொன்று வாகனேரிக்கு அனுப்பப்பட்டு அது தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த பகுதியில் ஓட்டமாவடியை சேர்ந்த முஸ்லிம்களினால் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பாக பல தடவைகள் வாழைச்சேனை பொலிஸாருக்கு அறிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கவில்லையெனவும் சீ.யோகேஸ்வரன தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.