தேர்தல் திகதியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்!
பொதுத்தேர்தல் திகதி தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்றும்(வெள்ளிக்கிழமை) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த மனுக்கள் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைய குறித்த மனுக்கள் நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில், புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று 9 ஆவது நாளாகவும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நேற்றைய தினம் காலை 10 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது, இடைக்கால மனுவை தாக்கல் செய்த பேராசிரியர் பந்துல எதகம சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா தமது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தலை நடத்துவதற்கான சட்டபூர்வ ஏற்பாடுகள் இல்லை என ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை