வட- கிழக்கு இணைப்புக்கு அடிக்கும் சாவுமணியே ஜனாதிபதி செயலணி- சிவசக்தி

வடக்கு- கிழக்கு இணைப்புக் கோரிக்கைக்கு அரசு அடிக்கும் சாவுமணியே ஜனாதிபதி செயலணியென தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் வன்னி மாவட்டநாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதாவது கிழக்கு மாகாண தொல்பொருள் பகுதிகளை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி விசேட செயலணி அமைத்துள்ளமையையும், அதற்கு பாதுகாப்பு செயலாளர் ஒய்வு பெற்ற கமால் குணரட்னவை நியமிக்கப்பட்டுள்ளமையையும் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? என குறித்த ஊடகத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதன்போது அதற்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிவசக்தி ஆனந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “உண்மையிலேயே இதுவொரு கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு திட்டத்தின் நீட்சியே.

தமிழர் தாயகத்தில் பௌத்தத்தின் பெயரால், தேசிய பாதுகாப்பின் பெயரால், வன, நிலங்கள், தொல்பொருள் பகுதிகள் என்றெல்லாம் பேரினவாதிகளினால் அகலக்கால் பதித்து வருகின்றார்கள்.

தமிழர்களின் பூர்வீக நிலத்தினை முழுமையாக பறித்து பெரும்பான்மையினரின் தேசமாக மாற்றியமைப்பதற்கு பல்வேறு முனைப்புக்களைச் செய்து வருகின்றார்கள்.

அவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணத்தில் புனித பூமி என்ற ரீதியில் பௌத்த விகாரைகள் அமைப்பதற்காக பௌத்த மத சின்னங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய அம்பாறையில் 247 இடங்களும், திருகோணமலையில் 74 இடங்களும், மட்டக்களப்பில் 28 விகாரைகள் உட்பட 55 இடங்கள் பௌத்த மதத்துடன் தொடர்புடைய தொல்லியல் இடங்களாக அடையாளப்படுத்தியுள்ளனர்.

இந்த விடயத்தினை தனியே கிழக்கு மாகாணத்தினை மட்டும் மையப்படுத்தி பார்க்க முடியாது. வடக்கு- கிழக்கு தமிழர் தாயகம் என்பதும் வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்பது தமிழர்களின் நீண்டகால கோரிக்கை.

ஆனால் பேரினவாதிகளை பொறுத்தவரையில் கொக்கிளாயில் சுமார் 60 சதுர கிலோ மீற்றர்களுக்குள் 5 கடற்படை முகாம்கள், 8 பௌத்த விகாரைகள், 10 இராணுவ முகாம்கள், 4 இராணுவ வியாபார நிலையங்கள் இவற்றுடன் பெரும்பான்மையினரின் குடியேற்றங்களும் ஏற்படுத்தப்பட்டு வடக்கையும் கிழக்கினையும் நிரந்தரமாக பிரிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றார்கள்.

இவ்வாறிருக்க, 1932ஆம் ஆண்டிலிருந்து பெரும்பான்மையினர் கிழக்கு நோக்கிய நகர்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். கந்தளாய், கல்லோயா, மகாஓயா, தீகவாபி திட்டம், துரித மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்று அபிவிருத்திட்டங்களின் போர்வையில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கினர்.

குறிப்பாக கிழக்கில் போர் நிறைவுக்கு வந்திருந்த சூழலில் கிழக்கு மாகாணத்தில் மேலும் ஒரு இலட்சம் சிங்களவர்களைக் குடியமர்த்துவதற்கும், அங்கு சிங்களவர்களின் சனத்தொகையை 55சதவீதத்தினால் அதிகரிப்பதற்கும் அப்போதைய மஹிந்த அரசு திட்டமிட்டிருந்தது.அதற்காக, திருகோணமலையில் கந்தளாய், அல்லை, மொரவேவ, முதலிக்குளம், பதவியா திட்டங்களின் கீழும் அம்பாறையில் கல்லோயா, பனல் ஓயா, அம்பலன் ஓயா திட்டங்களின் கீழும் நூறுவீதம் சிங்களவர்களே குடிமயர்த்தப்பட்டனர். அவ்வாறிருக்கையில் தற்போது, மகாவலி அபிவிருத்திக் திட்டம், கெடா ஓயா திட்டம் உட்பட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களின் கீழும் குடியேற்றங்களுக்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன.

இத்தகைய பின்னணிகளை வைத்துப் பார்க்கின்றபோது, மீண்டும் ராஜபக்ஷ அரசு ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில், தான் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்து இலக்கை அடைவதற்கு விழைகின்றமை வெளிப்படுகின்றது.

அதாவது தமிழர்களின் வடக்கு கிழக்கு இணைப்புக் கோரிக்கைக்கு சாவுமணி அடிப்பதற்கே ராஜபக்ஷ அரசு முனைகின்றது. இந்த முயற்சிகளுக்கு தொல்பொருளின் பெயரால் காய் நகர்த்தப்படுகின்றது”என  அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.