புலிகளை அழித்த ஒட்டுக் குழு புளொட்டும் ஆலாலசுந்தரம், தர்மரைக் கொன்ற ரெலோவும் சுமந்திரனைப் பற்றிக் கதைக்க என்ன தகுதி உண்டு?

Veluppillai Thangavelu என்பவரின் முகநூலில் இருந்து…..

யதார்த்தம் யாதெனில் சுமந்திரனுக்கு பொய் பேசத் தெரியாது. தேர்தல் வெற்றி தோல்வியை மனதில் வைத்து மனம் ஒன்று நினைக்க வாய் வேறுவிதமாகப் பேசும் தந்திரம் தெரியாதவர். மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்லிவிடுபவர். இது அவரது பலமாகவும் இருக்கலாம். பலவீனமாகவும் இருக்கலாம். அவரவர் பார்வையைப் பொறுத்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தி விட்டார் என்று அவர் மீது விழுந்து பிறாண்டுவோர் ஒன்றும் உத்தமர்கள் அல்லர்.. புளொட் தலைவர் சித்தார்த்தன் கடைசிவரை அரசபடைகளோடு சேர்ந்து விடுதலைப் புலிகளை அழித்தவர். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போது அந்த தோற்கடிப்பில் புளொட்டுக்கு கணிசமான பங்குண்டு என்று மார்தட்டியவர். புளொட்டின் வரலாற்றை கூர்ந்து நோக்கினால் அந்த அமைப்பு அரச படைகளோடு சண்டை பிடித்தது கையளவு. வங்கிகளைக் கொள்ளையடித்தது மலையளவு. மாலைதீவு மீது நடத்ததப்பட்ட தாக்குதல் தோல்வி அடைந்த பின்னர் புளொட் அமைப்பு சிறிலங்கா அரசிடம் சரணடைந்துவிட்டது.

ரெலோவின் கதையும் புளொட் போன்றதே. தமிழ் அரசுக் கட்சிப் பிரமுகர்கள் மு.ஆலாலசுந்தரம், வி.தர்மலிங்கம் இருவரையும் எந்த முகாந்திமும் இன்றி – இந்திய றோ அமைப்பு வைத்த சோதனையை மெய்ப்பிக்க – கொன்று வீதியில் அவர்களது சடலங்களை எறிந்தது.

இந்தப் பழைய கறைபடிந்த வரலாற்றைத் தோண்டிப் பார்ப்பது எனது நோக்கமல்ல. ஆனால் சித்தார்த்தனும் அடைக்கலநாதனும் தங்களைப் புனிதர்கள் ஆகவும் சுமந்திரனை் பாவியாகவும் சித்திரிக்க முற்படுகிறார்கள்.

சுமந்திரன் அப்படி என்னதான் அந்த நேர்காணலில் சொல்லிப் போட்டார்? “நான் ஆயுதப்போராட்டம் ஒன்றை யும் ஒருபோதும் ஆதரிப்பவன் அல்லன் என்பதுதான்” அவர் சொன்னது.

இன்று தமிழீழ விடுதலைப்  புலிகளுக்காக உயிரை விடுகிறவர்களில் பலர் நாட்டை விட்டு வெளியேறியவர்கள். தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளில் விட்டுப் படிப்பித்தவர்கள். அவர்கள் செய்தது பிழை என்று சொல்ல நான் அணியமாக இல்லை. ஆனால் அவர்களுக்கு சுமந்திரன் மீது கை நீட்டிக் கதைக்க அருகதையில்லாதவர்கள். தமிழ்த் தேசியத்தை யாரும் குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கவில்லை.

2010 இல் 2015 இல் நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் தமிழ்மக்கள் தங்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமானவர்கள் எனக் காட்டிக் கொண்டவர்களைத் தோற்கடித்தார்கள்.

சனநாயகப் போராளிகள் எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு தேர்தலில் குதித்தவர்கள் கட்டுக்காசை இழந்தார்கள். தமிழ்மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரத்தை, அர்ப்பணிப்பை, தியாகத்தை மெச்சுகிறார்கள். ஆனால் அவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க அவர்கள் விரும்புபவர்கள் அல்லர்.. இதுதான் உண்மை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.