மக்களின் உணர்வைப் புரிந்து சுமந்திரன் செயற்படவேண்டும் – மாவை
சுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் விவகாரம் நேற்று இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பாரியதொரு பூகம்பம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் கூட்டம் சுமூகமாகவ இடம்பெற்றதாக அறிய முடிகின்றது.
இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டபோதும் சுமந்திரனின் கருத்துக்கு முதலாவதாக வந்து கண்டனம் தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன் சமூகமளிக்கவில்லை.
இந்த நிலையில் சுமந்திரனைப் பதவிவிலக்கவேண்டுமென நாம் தனிப்பட்ட காரணங்களுக்காக வலியுறுத்தவில்லை, ஆனால் அவராகக் கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பைத் துறக்கவேண்டும் எனக் கடந்த கூட்டத்தில் வலியுறுத்திய செல்வம் அடைக்கலநாதன் நேற்றைய சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. அவர் திடீர் உடல்நலக் குறைவுக்குள்ளாகியுள்ளார்.
நேற்றைய சந்திப்பில், சுமந்திரனைப் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நீக்கவேண்டுமென நாம் விரும்பவில்லை. ஆனால் அவர் தனிப்பட்ட கருத்துக்களை தவிர்த்து, மக்களின் உணர்வுகளை புரிந்து பேசவேண்டுமென மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
அதை ஆமோதித்த இரா.சம்பந்தன், சுமந்திரனின் சர்ச்சைக்குரிய பேட்டி வெளியான பின்னர் தன்னுடனும் பலர் பேசியதாகக் குறிப்பிட்டார். அந்தப் பேட்டி கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் தாக்கத்தைச் செலுத்துமெனப் பரவலாகத் தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.
“தமிழ் அரசியல் நெருக்கடியான சூழலில் இருக்கும் இன்றைய சமயத்தில் ஒவ்வொருவரும் பொறுப்பான முறையில் கதைக்க வேண்டும். மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தாமல் பேச வேண்டும்” என சம்பந்தன் ஆலோசனை தெரிவித்தார்.
“கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலகமாட்டேன். விரும்பினால் கூட்டமைப்பு என்னை விலக்கிக் கொள்ளட்டும்” என எம்.ஏ.சுமந்திரன் இதன் போது தெரிவித்தார்.
எனினும், இது மோதல் களமல்ல. அனைவரும் ஒற்றுமையாகச் செயற்பட்டாலே கூட்டமைப்பினால் எதையாவது செய்ய முடியும். அனைவரும் தவறுகளைப் புரிந்து கொண்டு, முன்னோக்கிச் செல்ல வேண்டும் என இரா.சம்பந்தன் குறிப்பிட்டார் என அறிய முடிகின்றது.
அண்மையில் சிங்கள ஊடகமொன்றில் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து, ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்திருந்ததாக கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன.
இதேவேளை சுமந்திரனின் அண்மைய கருத்து தொடர்பாக நேற்று முன்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் இரா.சம்பந்தனின் இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பில், எம்.ஏ.சுமந்திரன் விவகாரத்தை முதன்மையானதாக விவாதிக்கவில்லை. பொதுத்தேர்தல், புதிய அரசுடன் பேச்சு, புதிய இந்தியத் தூதர், ஜனாதிபதி, பிரதமருடன் பேச்ச, அரசியல் கைதிகள் விடயம் என்பன பற்றி ஆராயப்பட்டது.
முக்கியமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பாக அதிருப்தி தெரிவித்து அரசியல் கைதிகள் ஒரு கடிதம் அனுப்பியிருந்தனர். அது குறித்து விவாதிக்கப்பட்டு, இனியும் காலத்தை இழுத்தடிக்காமல் அரசுடன் உடனடியாக இது பற்றி பேசுவதென முடிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை