நல்லூர் பிரதேச சபைக்கு 7.5 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு – தவிசாளர் த.தியாகமூர்த்தி

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தினால் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் காரணமாக நல்லூர் பிரதேச சபைக்கு 7.5 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தவிசாளர் த.தியாகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அத்தோடு எதிர்வரும் 1 ஆம் திகதியில் இருந்து தமது பிரதேச சபையின் எல்லைக்குள் இருக்கும் பொதுச் சந்தைகள் அனைத்தும் திறக்கப்படவுள்ளதாகவும் த.தியாகமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.

நல்லூர் பிரதேச சபையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தவிசாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கத்தின் காரணமாக அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.இதனால் எமது சபையின் எல்லைக்குட்பட்ட பொதுச் சந்தைகளும் வர்த்தக நிலையங்களும் பூட்டிடப்பட்டன.

நாட்டில் கொரோனா தாக்கம் காரணமாக அரசு ஊரடங்கு சடடத்தை அமுல்படுத்தக் கூடும் என்று நாம் சில முன்னாயத்தங்களை மேற்கொள்ள கூட்டம் ஒன்றை கூட்டி சில தீர்மானங்களை எடுத்திருந்தோம்.

அதில் குறிப்பாக பொதுச் சந்தைகள் பூட்டப்பட்டதால் அதற்கான மாற்றீடுகள் தொடர்பில் தீர்மானிக்கும் வகையில் நாம் எமது எல்லைக்கு உட்பட்ட முக்கிய வீதிகளில் வியாபாரிகளை விற்பனை செய்ய அனுமதித்தோம்.பின்னர் தனியார் காணி ஒன்றில் குறிக்கப்படட வியாபாரிகளை விற்பனைக்கு அனுமதித்தோம்.

இதனால் எமக்கு கிடைக்க வேண்டிய பல வருமானங்கள் கிடைக்கவில்லை. குறிப்பாக எமது சபையின் எல்லைக்குள் அதிக வருமானத்தை ஈட்டி தரும் திருநெல்வேலி சந்தை ஊடாக நாளாந்தம் 66234 ரூபாய் என்ற அடிப்படையில் 5 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான வருமான இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

ஏனைய,வரிகள்,சபையின் கடைகள் பூட்டப்பட்டமை என மொத்தமாக எமது சபைக்கு 7.5 மில்லியன் ரூபாய் வருமான இழப்பீடு ஏற்பட்டுள்ளது.தற்போது அரசு ஊரடங்கு சடடத்தைனை நீக்கி அன்றாட செயற்பாடுகள் வழமைக்கு திரும்புகின்றமையினால் நாம் பூட்டப்பட்ட அனைத்து பொதுச் சந்தையையும் எதிர்வரும் 1 ஆம் திகதி திங்கடகிழமை தொடக்கம் இறுக்கமான நடைமுறைகளுடன் நாம் திறக்க தீர்மானித்துள்ளோம்.

குறிப்பாக எமது சபை எல்லைக்குட்படட அனைத்து சந்தைகளும் காலை 6 மணி தொடக்கம் மாலை 7 மணிவரை திறக்க அனுமதி வழங்கியுள்ளோம். சந்தைகளில் வியாபாரிகள் காலை 6 மணி தொடக்கம் 7 மணிக்குள் தமது உற்பத்தி பொருட்களை வியாபாரிகளிடம் வழங்க வேண்டும். காலை 7 மணியில் இருந்து பொதுமக்கள் தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்யமுடியும்.

மேலும் திருநெல்வேலி சந்தை அமைந்துள்ள பலாலி வீதி திருநெல்வேலி சந்தியில் இருந்து கல்வியங்காடு வீதி காலை 6 மணி தொடக்கம் 12 மணி வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

சந்தைக்கு வரும் மக்கள் சம்மூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் கைகளை கழுவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்களின் சுகாதாரம் உரிய வகையில் பேணப்படாது போனால் சந்தை மீண்டும் மூடப்படும். எனவே வியாபாரிகளும் பொதுமக்களும் தனிநபர் சுகாதாரத்தை முறையாக பேண வேண்டும்” என தவிசாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.