நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றது – வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி மேல், சப்ரகமுவ,மத்திய, வடமேல்மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது
களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இக் கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையானகரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் அவ்வப்போது 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை