அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்குபவர்கள் தான் இந்த மண் அகழ்விற்கு ஆதரவு

மட்டக்களப்பு வாகனேரி பகுதியில் சட்ட விரோத மண் அகழ்வு தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறையிட்ட போதிலும் அவர்கள் கரிசனை காட்டாததன் காரணமாகவே நேற்று வாகனேரியில் பொதுமக்கள் தாக்கப்படும் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

வாகனேரியில் மண் அகழ்வில் ஈடுபடுவோர் முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்கள். இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரசின் தலைவருடன் பேசவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவின் வாகனேரி என்ற கிராமத்தில் மண் அகழும் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்திருக்கின்றது. சட்டவிரோதமாக மண் அகழும் நடவடிக்கையானது அங்கு நீண்டகாலமாக நடைபெற்று வருகின்றது.

கடந்த காலங்களில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டங்களில் கூட வாகனேரி பகுதியில் சட்டவிரோத மண் அகழும் நடவடிக்கையானது நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றதென பொது அமைப்புகளும் மக்களும் சுட்டிக்காட்டி வந்தனர்.

சிலவற்றை நாங்கள் தடுத்து வந்தோம். ஆனாலும் சில அரசியல்வாதிகளின் ஆதரவோடு அங்கு மண் அகழும் சம்பவமானது அங்கு தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

ஆனால் நேற்றைய தினம் நடைபெற்றது என்னவெனில் சட்டவிரோதமாக மண் அள்ளுகின்றவர்களை எதிர்த்து மக்கள் அங்கு சென்று அவர்களை தடுத்தபோது சட்டவிரோத மண்அகழ்வில் ஈடுபட்ட ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் வாகனேரி பொதுமக்கள் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டிருக்கின்றனர்.

கிட்டத்தட்ட பெண்கள் உட்பட ஐந்து பேர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுள் பாலகுமார் எனப்படுபவர் மிகக்கடுமையாகத் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதேபோன்று மற்றைய இருவர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் இருவரையும் நான் நேரில் சென்று பார்வையிட்டு நடந்த விடயங்களை தெளிவாகக் கேட்டறிந்தேன்.

வாழைச்சேனை, ஏறாவூர்பற்று பிரதேசங்களுக்குரிய உதவிப்பொலிஸ் அத்தியட்சகரோடு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தாக்குதல் மேற்கொண்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டிருந்தேன். உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஏறாவூரிலிருந்து விஷேட பொலிஸ் குழுவை அனுப்பி இவ்வாறான தாக்குதலை மேற்கொண்டவர்களை கைது செய்து சிறையில்அடைத்து அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

கடந்த சில நாட்களாக மீண்டும் சட்டவிரோத மண் அகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மண் அகழ்பவர்கள் சார்பாக நியாயமான ஒரு முடிவை எடுப்பதற்காக கடந்த டிசம்பர் மாதம் ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தோம்.

தற்காலிகமாக ஒரு மாதத்திற்கு நிறுத்தி அதை ஆராய்ந்து பிரதேச செயலாளர்கள், கிராம அமைப்புக்கள், புவிச்சரிதவியல் திணைக்களப் பணிப்பாளர், அரச அதிபர் உட்பட துறைசார் வல்லுநர்களையும் அழைத்து ஆலோசித்து யார்யாருக்கு மண்அகழ்விற்கான அனுமதி வழங்குவதென தீர்மானித்து சிறந்த ஒழுங்கு முறையில் அதனைமேற்கொள்வதற்கான தீர்மானத்தை எடுத்திருந்தோம் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.